கூட்டணிகளுக்குள் எழும் ‘கலக’ குரல்கள்

By J.G.Stephan

11 Jan, 2021 | 05:19 PM
image

- குடந்தையான் -

தமிழக அரசியல் களம் ரஜினியின் வருகை இல்லாததால் திசைமாறி பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. வாக்காளர்களிடத்திலும், அரசியல் தளத்திலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்ட பிம்பத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 

இதனால் ஆளும் கட்சியான அ.தி.மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் துணையுடன் வேறு வகையிலான அணுகுமுறையை பின்பற்ற தொடங்கி இருக்கிறது. அதில் ஒரு வகைதான் ‘ஆலோசனைக் கூட்டம்’ என்ற பெயரில் தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுத்துவருகின்றது. அதனடிப்படையிலேயே மு.க.அழகிரியும் கூட்டத்தினை நடத்தினார். அதற்கு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில்  ஏதேனும் பிளவுகளோ அல்லது விரிசல்களோ அல்லது உரசல்களோ ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரியின் நடவடிக்கை எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தேர்தல் நெருங்க நெருங்கத்தான் தெரியவரும். இதனிடையே மதுரையில் அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய தி.மு.க.வினரை பா.ஜ.க.வின் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.

அதேதருணத்தில் அழகிரி விடயத்தில் மற்றொரு விடயமும் உள்ளது. அழகிரி முன்னெடுப்பதும் வேறு வகையிலான வாரிசு அரசியல் தான். ஏனெனில் அழகிரி தன்னுடைய பேச்சில் தி.மு.க.வை மட்டுமே குறிவைத்து பேசினாரேத் தவிர அ.தி.மு.க.வைப் பற்றியோ அல்லது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வைப் பற்றியோ வார்த்தையொன்று கூட பேசவில்லை. இது தி.மு.க.வினரையும் ஏனைய அரசியல் கட்சியினரை ஆச்சரியப்பட வைத்ததுடன் புதிராகவும் இருக்கின்றது.

தி.மு.க. கூட்டணியின் தலைவராக இருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரைமறைவுக் காரியங்களில் ஈடுபட்டு, பல்வேறு கட்ட சந்திப்புகளை நடத்தி, ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவிடாமல் அதிலும் தேர்தல் அரசியலுக்கு வரவிடாமல் தற்காலிகமாக தடுத்து விட்டார். இந்நிலையில் அவருடைய மூத்த சகோதரரும், தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்ற குறிப்பாக தென் தமிழகத்தில் தி.மு.க.வின் அடையாளமாகவே தொண்டர்களால் பார்க்கப்படும் மு.க.அழகிரியின் அதிரடியான நடவடிக்கை அவருக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற உண்மையான தி.மு.க. தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கு பற்றிய மு.க.அழகிரி, மேடை பேச்சில் வல்லவரான கலைஞரின் உண்மையான வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய மேடைப்பேச்சு கலைஞரைப்  போன்றே அமைந்திருந்ததை பலரும் குறிப்பிட்டு  பாராட்டியிருக்கிறார்கள்.  

அவரது பேச்சில் தி.மு.க.வுக்காக  தான்  உழைத்த உழைப்பு இடம்பெற்றிருந்தது. இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘திருமங்கலம் போர்முலா’ என்பதை வலிமையாக மறுத்து பேசியதும் ‘ஸ்டாலின் முதல்வராக விட மாட்டேன்’ எனச் சுட்டிக்கூறியுதும் அ.தி.மு.க., பா.ஜ.க. மட்டுமல்ல ஏனைய அரசியல் கட்சித் தொண்டர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் கொள்கை, ‘கட்சியிலுள்ள அனைவரையும் அனுசரித்தும், அரவணைத்தும் செல்வது  தான்’ என்பர் அவருடன் பணியாற்றியவர்கள். இந்நிலையில், உடன் பிறந்த அண்ணனையே அரவணைத்து செல்லத் தயங்கும் ஸ்டாலின், உடன் பிறப்புகளையும், அவரை நம்பி வாக்களிக்கும் மக்களையும் எப்படி அரவணைத்து செல்வார்? என்ற வினா இயல்பாகவே அனைவரிடத்திலும் எழுகிறது. 

இதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஸ்டாலின், தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார். இது முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற அவரின் கனவு நிறைவேறாமல் ஆகிவிடுமோ..! என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 25000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்பதால், இம்முறை தி.மு.க.வை வெற்றிப் பெற வைக்க அனைத்து வகையிலான செயல்களையும் செய்ய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தயாராகவேயிருக்கிறார். 

அழகிரி விடயத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து தான் அக்கட்சியின் வேட்பாளர்கள் தென் தமிழகத்தில் வெற்றி  பெறுவார்களா? அல்லது உள்ளடி வேலையில் ஈடுபட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படுவார்களா? என்பது தெரிய வரும்  என்கிறார் தி.மு.க.வின் மூத்த நிர்வாகி.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற தி.மு.க.வின் நிர்பந்தத்தை ஏற்க மறுத்து வருகிறன. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து  அரசியல் கட்சி என்ற அந்தஸ்த்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி ஆகியன ‘தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்’ என்று  உறுதிபட தி.மு.க. தலைமையிடம் தெரிவித்துள்ளன. 

இதனால் தி.மு.க.வின் வெற்றி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. அத்துடன் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தொகுதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட வேண்டும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தை விரிவாக நடத்தப்பட வேண்டும் என்று சிறிய கட்சிகள் தி.மு.க. தலைமையிடம் விடாப்பிடியாக வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் தி.மு.க. தலைமை இந்த விடயம் குறித்தும் எந்தவித முடிவும் அறிவிக்காமல்  மௌனம் காத்து வருகிறது. ம.தி.மு.க. 15 தொகுதிகளையும், இந்திய ஜனநாயக கட்சி 6 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 20 தொகுதிகளையும் கேட்கிறது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியும், இஸ்லாமிய கட்சிகளும் தங்களுக்கு கௌரவமான எண்ணிக்கையில் தொகுதி வழங்கப்படவேண்டும் என்று  எதிர்பார்க்கின்றன.

இதற்கு பதிலளிக்க விரும்பிய தி.மு.க. நிர்வாகிகள், ‘ரஜினி அரசியலில் ஈடுபட்டிருந்தால் தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டிருப்பார்கள். ரஜினி அரசியலில் ஈடுபடாததால் தங்களது கோரிக்கைகளை இக்கட்சிகள் உரத்த குரலில் கேட்கிறார்கள் என்று பதிலடி வழங்கி வருகின்றார்கள்.

தி.மு.க. கூட்டணியில் அழகிரியைத் தொடர்ந்து, அக்கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற ‘கலக’ குரலை எதிரொலிக்கிறது என்றால், எதிர் முகாமில் உள்ள பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜ.க. ஆகிய கட்சிகள்  அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க  முடியாது என்று பகிரங்கமாக அறிவித்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க. கூட்டணியிலும் குழப்ப நிலை நீடிக்கிறது. 

தன் கட்சியினரை சமாளித்து முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டாலும், ஆளும் கூட்டணியில் உள்ள பா.ம.க. மற்றும் தேமுதிக ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டி வருவதை எப்படி சரி கட்டுவது?  என்ற குழப்பத்தில் முதல்வர் எடப்பாடி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 2,500ரூபா மற்றும் பொங்கல் பொருட்கள் தருவதை மக்கள் அதிகளவில் விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தி குறைந்து விடும் என்ற கணக்கும் உள்ளது.

இதனிடையே சென்னைக்கு ஜனவரி 14ஆம் திகதியன்று வருகைதரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரஜினியை சந்தித்து நலம் விசாரிக்க கூடும் என்றும், அதே தருணத்தில் தி.மு.க.வின் அழகிரியும் அவர் சந்திக்க கூடும் என்று பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.  இத்தகைய நிகழ்வு நடை பெற்றால் தி.மு.க.விற்கு உள்ள நெருக்கடி மேலும் அதிகரிக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right