யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமொன்று நடைபெற்றது.

இறுதி கட்ட போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  நினைவு தூபி வெள்ளிக்கிழமை இரவோடு, இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்  கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டமொன்று  நடைபெற்றது. 

இன்று காலை நடந்த இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.