(நா.தனுஜா)

மருந்துப்பொருள் உற்பத்தியில் ஈடுபடுவோர் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்காக விசேட ஆலோசனைக்குழுவொன்றை நியமிக்கப்பவிருப்பதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மருந்துப்பொருள் உற்பத்திக் கைத்தொழிலில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கென விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் மருந்துப்பொருள் உற்பத்தியுடன் தொடர்புடைய தரப்பினருடன் அமைச்சர் விமல் வீரவன்ச நடத்திய சந்திப்பொன்றை நடத்தினார்.

மேற்படி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும் மருந்துப்பொருள் உற்பத்திக் கைத்தொழிலை வலுப்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கான குழுவொன்றை நியமிப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் பல்வேறு மருந்துப்பொருட்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

எனவே அதற்கேற்றவாறு உள்நாட்டில் மருந்துப்பொருள் உற்பத்தியில் ஈடுபடுவோர் தயாராக வேண்டும் என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.

மருந்துப்பொருள் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் வரிக்கொள்கை, ஏற்றுமதி வரி உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது மருந்துப்பொருள் உற்பத்தியாளர்கள் அமைச்சருக்கு எடுத்துரைத்தனர்.

அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.