- சி.அ.யோதிலிங்கம் -

“கொள்கைச்சரிவு பற்றி கரிசணை கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் என்பது மூலோபாயத்தை மட்டும் கொண்டதல்ல. தந்திரோபாயத்தையும் உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் பல சந்தர்ப்பங்களில் இதனைக் கவனமாகப் பின்பற்றினர். இந்தியப் படையை அகற்றுவதற்காக பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்தனர். பின்னரான  காலத்தில் தாங்களே தடை செய்த சகல ஆயுத விடுதலை இயக்கங்களை கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்றிணைந்து இயங்குவதற்கு அனுமதித்தனர் என்பதே சிறந்த உதாரணமாகிறது”

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து அதன் தலைமையால் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள சட்டத்தரணி மணிவண்ணன் எவரும் எதிர்பார்க்காத வகையில் யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

மேலதிகமாக நல்லூர் பிரதேச சபையையும் மணிவண்னன் தரப்பு கைப்பற்றியுள்ளது. வழக்கு முடியும் வரை மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணனை நீக்க முடியாதென யாழ்பாண நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியிருக்கிறது. 

மணிவண்ணனுக்கு அதிஷ்டம் போல என்ற முணுமுணுப்புக்களும் இருக்கின்றன. அவர் தொடர்பில் அடுத்தடுத்து சாதகமான நிகழ்வுகள் நடந்தேறியிருக்கிறன. மணிவண்ணனும் மேயர் பதவியை பொறுப்பேற்ற கையோடு, வேதனத்தை பொதுச்சேவைக்கு பயன்படுத்தப்போவதாகவும், மாநகர சபையின் உத்தியோக பூர்வ வாகனம் தனக்குத்தேவையில்லை என்றும் அறிவித்திருக்கிறார். 

ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் என்ற விமர்சனத்தை தவிர்ப்பதற்காக மேயர் பதவியை பொறுப்பேற்று சத்தியப்பிரமாணம் செய்தவுடன் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையினால் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனின் முயற்சியினால் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அனைத்திற்கும் சவால் விடக்கூடிய வகையில் முடிசூடியிருக்கின்றார். 

இந்த  விடயத்தில் அதிகமான நெருக்கடிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்குத் தான் ஏற்பட்டிருக்கின்றது. தங்களால் குற்றம் சாட்டப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் உடைத்துக் கொண்டு முடிசூடுவது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது தான். 

தமிழ் மக்களின் விவகாரம் சர்வதேச மயப்பட்ட பின்னர் மேயர் என்று அழைக்கப்படுகின்ற யாழ்ப்பாண நகர பிதா பதவியும் சர்வதேச ரீதியாக முக்கியம் வாய்ந்தது. அதன் முக்கியத்துவம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட மேலானது எனலாம். வடக்கிற்கு வருகின்ற வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட சர்வதேச முக்கியஸ்தர்கள் யாழ்.நகர பிதாவையும் சந்தித்து செல்வதே வழக்கமானதாகும். 

மணிவண்ணன் நகர பிதாவானதன் சூத்திரதாரி சுமந்திரன் என்றே பேசப்படுகின்றது. மாவை – சுமந்திரன் முரண்பாடே இதற்கு பிரதான காரணமாகும் என்றும் கூறப்படுகின்றது. சுமந்திரன் - டக்ளஸ் - மணிவண்ணன் என்போரின் நலன்கள்  ஒரு புள்ளியில் சந்தித்ததால் இந்த முடிசூடல் இடம் பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதுதான் உண்மையென்றால் சுமந்திரனுக்கு ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் கிடைத்திருக்கிறது எனலாம். தனக்குத் துரோகமிழைத்த  ஆர்னோல்ட்டை  தோல்வியடையச் செய்யதமை, தனக்கு போட்டியாக உள்ள மாவையை பலவீனப்படுத்தியமை, தன்னை எப்போதும் விமர்சனம் செய்யும் கஜேந்திரகுமாரை நெருக்கடிக்குள்ளாக்கியமை என்பவையே அவையாகும்.

இதன் மூலம் இன்னோர் செய்தியையும் சுமந்திரன் கூறியிருக்கின்றார். அதாவது எனக்கு சார்பாக இருந்தால் நீங்கள் உச்ச நிலைக்கு செல்வீர்கள் என்னை எதிர்த்து நின்றால் பாதாளத்திற்கு செல்வீர்கள் என்பது தான் அந்தச் செய்தி. இது சுமந்திரனுடன் தற்போது இருக்கும் அணியிருக்கான ஒரு விசேட செய்தியும் தான்.

கூட்டமைப்புக்குள் சுமந்திரன் அதிகாரமுள்ள பெரும்பதவியில் இல்லை. ஊடகப் பேச்சாளர் மட்டும் தான் அவருடைய பாத்திரம். மாவையோ கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியின் தலைவர் எனினும் தமிழ் அரசியலின் பிரதான பாத்திரத்தை சுமந்திரன் தான் தற்போதும் மேற்கொள்கின்றார். 

சுருக்கமாகக் கூறினால் “சுமந்திரன் ஒரு இயங்கு நிலை அரசியல்வாதி” எப்பொதும் இயங்கிக் கொண்டிருப்பவர். இதனால் அதிகளவு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்த போதும், தேர்தலில் பலவீன வெற்றியைப் பெற்ற போதும் இப்போதும் மேல்நிலையில் இருக்கின்றார். (அவரது அரசியல் நிலைப்பாடுகளில் இக்கட்டுரையாளர்களுக்கும் உடன்பாடு இல்லை) இருப்பினும் சுமந்திரனின் ஆற்றலை எவராலும் குறைத்து மதித்து விட முடியாது.

இதேவேளை டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பல வெற்றிகள் கிடைத்திருக்கின்றன என்றே கூறலாம். அதில் முதலாவது தனது போட்டியாளரான அங்கஜன் இராமநாதன் மேலாதிக்கம் செலுத்துவதை தடுத்து நிறுத்திமையாகும். டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கியிலேயே அங்கஜன் இராமநாதன் கை வைத்திருக்கிறார். தேர்தலில் எதிர்பார்க்காத வகையில் யாழ்.மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கின்றார். 

மணிவண்ணன் நகர பிதாவாக தெரிவு செய்யப்படாவிடின் யாழ்.மாநகர சபை கலைக்கப்படக்கூடிய சூழலே ஏற்பட்டிருக்கும். அவ்வாறு கலைக்கப்படின் அரசாங்கம் தற்போதைக்கு தேர்தலை நடாத்தாது. இதனால் ஆணையாளர் நிர்வாகமே மாநகரசபையில் இடம்பெறும். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவர் என்ற பெயரில் அங்கஜனே நிர்வாகத்தில் மேலாதிக்கம் செலுத்துவார். 

இது கூட்டமைப்பினரை விட டக்ளஸ் தேவானந்தாவிற்கே சகிக்க முடியாததாக இருக்கும். ஏற்கனவே இரு தரப்புக்குமிடையே பனிப்போர் யாழ்.மாவட்டத்தினை மையப்படுத்தி மையம் கொண்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் கூட அந்த பனிப்போரை தடுக்க சிரமப்படுகின்றதாகவும் தகவல்.

இரண்டாவது தங்களை அடிக்கடி விமர்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை சற்று அடக்கி வைப்பதாகும். ஏற்கனவே கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் தங்களை விமர்சனம் செய்கின்றனர் எனக் கூறியிருக்கின்றார். 

மூன்றாவது ‘கனவான் அரசியல்வாதி’ என்ற பெயரை தமிழ் மக்கள் மத்தியில் பெறுவதாகும். அதற்காகவே, கட்சி அரசியலுக்கப்பால் ஒரு சுமூகமான நிர்வாகத்தை நடாத்துவதற்காகவே ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றோம் என்று அறிவித்திருக்கிறார். 

அத்துடன் மிக நாகரிகமாக இது கொள்கைக் கூட்டுமல்ல, தேர்தல் கூட்டுமல்ல சுமூகமான நிர்வாகத்திற்கான ஒத்துழைப்பு மட்டுமே என்றும் அவர் கூறியிருக்கின்றார். மணிவன்னனை நான் சந்தித்ததும் கிடையாது. பேசியதும் கிடையாது என்றும் டக்ளஸ் கூறியிருக்கின்றார். எனினும் டக்ளஸின் மணிவண்ணனுக்கான ஆதரவு தொடர்பிலான எதிர்வினைகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களிடமிருந்து தான் அதிகம் வந்திருக்கிறது. 

ஒட்டுக்குழுவுடன் மணிவண்ணன் சேர்ந்திருக்கிறார் என்று கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார். மணிவண்ணனுக்கு ஆதரவளித்த 10 பேரையும் கட்சியிலிருந்து நீக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். இவர்களோடு நல்லூர் பிரதேசசபையில் ஆதரவளித்தவர் மூவரையும் சேர்த்தால் முன்னணியில்  இருந்து மொத்தம் 13 பேர் நீக்கப்படவுள்ளனர். 

ஏனைய பிரதேசசபை உறுப்பினர்களிலும் அரைவாசிப்பேர் மணிவண்ணனுக்கு ஆதரவளித்திருக்கின்றார். எதிர்காலத்தில் அவர்களையும் நீக்க முன்னணியின் தலைமை தீர்மானம் எடுப்பதற்கு முற்படலாம். முன்னணி ஆரம்பகாலத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தபோது பணியாற்றிய உறுப்பினர்கள் பலர் அதிருப்தியால் வெளியேறியுள்ளனர்.

அடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் முக்கிய குற்றச்சட்டு நகரபிதா பதவியை ஏற்றமை மாபெரும் கொள்கைச் சரிவு, என்பதாகும். மட்டக்களப்பு மயிலந்தனை மேச்சல்தரை விவகாரத்தில் பிள்ளையானின் கட்சியுடன் இணைந்து அமைச்சர் சமல் ராஜபக்ஷவினைச் சந்தித்தபோது நிகழாத கொள்கைச்சரிவு, அங்கஜனின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது வராத கொள்கைச் சரிவு மாகாண சபைத் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்று கடந்த மாகாண சபைத் தேர்தலில் அறிவித்துவிட்டு தற்போது தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுத்த போது வராத கொள்கைச் சரிவு மணிவண்ணன் நகரபிதா பதவியை ஏற்றதால் வந்துவிடும் எனக் கூற முடியாது. 

உள்ளுராட்சிச் சபைத்தேர்தலின் பின்னர் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து மாநகரசபை ஆட்சியைக் கைப்பற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரு விருப்பம் கொண்டிருந்தது. கட்சி தலைமை அலுவலகத்தில் இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் இடம் பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரும், செயலாளர் கஜேந்திரனும் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைப்பதே நல்லது என்றும் வாதித்தனர். 

சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஸ், வடமராட்சி கிழக்கு காண்டீபன் ஆகியோர் மட்டும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இறுதியில் ஈ.பி.டி.பி. கூட்டமைப்பை ஆதரிக்க முடிவு செய்ததால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. அப்போது கொள்கைச்சரிவு பற்றி ஏன் சிந்திக்கவில்லை.  

உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் முடிவடைந்த வேளையுடன் “நீங்கள் அதிக ஆசனங்கள் பெற்ற பருத்தித்துறை நகரசபையிலும், சாவகச்சேரி நகரசபையிலும் ஆட்சியமைக்க நாங்கள் ஒத்துழைப்புத் தருகிறோம் யாழ்ப்பாண மாநகர சபையிலும் ஏனைய சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்க ஒத்துழைப்புத் தாருங்கள்” எனக் கூட்டமைப்பு கேட்டிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதற்கு ஒத்துழைக்கவில்லை. 

அன்று ஒத்துழைக்கும் முடிவை எடுத்திருந்தால் தமிழ்த்  தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்துக்குள்ளேயே பெரும்பாலான உள்ளுராட்சிச் சபைகளை கொண்டுவந்திருக்கலாம். சற்று பேரம் பேசியிருந்தால் நல்லூர் பிரதேச சபையின் அதிகாரத்தையும் பெற்றிருக்கலாம். அங்கு கூட்டமைப்புக்கு 6 ஆசனங்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு 05 ஆசனங்களும் இருக்கின்றன.

அரசியல் என்பது மூலோபாயத்தை மட்டும் கொண்டதல்ல.  தந்திரோபாயத்தையும் உள்ளடக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் பல சந்தர்ப்பங்களில் இதனைக் கவனமாகப் பின்பற்றினர். இந்தியப் படையை அகற்றுவதற்காக பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்தனர். பின்னரான  காலத்தில் தாங்களே தடை செய்த சகல ஆயுத விடுதலை இயக்கங்களை கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்றிணைந்து இயங்குவதற்கு அனுமதித்தனர்.

தந்திரோபாய நகர்வு என்று பார்த்தால் முன்னணியினர் மேய்ச்சல் விவகாரத்தில் பிள்ளையான் குழுவுடன் இணைந்து செயற்பட்டமையும், அங்கஜனின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டமையும், மாகாண சபைத் தேர்தலை முன்னர் பகிஷ்கரிப்பது என்று  அறிவித்து விட்டு பின்னர் போட்டியிடுவது என்று முடிவெடுத்தமையும், ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து யாழ்.மாநகர சபையைக் கைப்பற்ற முனைந்தமையும் தவறானவையே அல்ல. 

அதேபோலத் தான் யாழ்.நகர பிதா பதவியை மணிவண்ணன் ஏற்றமையும் தவறானது அல்ல. மணிவண்ணன் நகர பிதா பதவியை ஏற்றமை பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் முதலாவது யாழ்ப்பாண மாநகர சபை தமிழ் மக்களினுடைய மாநகர சபை. தமிழ் மக்களுக்கான நிர்வாகம் அதை தமிழ்த் தேசிய சார்பு கொண்ட ஆற்றல் வாய்ந்த இளைஞன் பொறுப்பேற்றிருக்கிறான் என்று சாதகமாக நோக்கலாம்.

இது தமிழ் அரசியலுக்கும் தமிழ் மக்களின் ஏனைய முன்னேற்றங்களுக்கும் எப்போதும் உதவிக்கரமாகவே அமையும். இங்கு ஈ.பி.டி.பி. ஆட்சியமைக்க மணிவண்ணன் தரப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக மணிவண்ணன் தரப்பு ஆட்சியமைக்கவே ஈ.பி.டி.பி. ஆதரவு கொடுத்திருக்கின்றது. அதுவும் முற்கூட்டியே பேச்சுக்கள் எதுவும் இன்றியே வழங்கப்பட்டுள்ளது. 

அடுத்து, மணிவண்ணன் இதைப் பொறுப்பேற்காவிட்டால் முன்னர் கூறியது போல மாநகர சபை கலைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு கலைக்கப்பட்டால் அரசாங்கம் இப்போதைக்கு தேர்தலை நடாத்தப் போவதில்லை. இதனால் அரசாங்கத்தின் நிர்வாகமே இடம் பெறும். அந்நிர்வாகம் மாநகரப்பிரதேசத்தில் சிங்கள மயமாக்கலையும் மேற்கொள்ளலாம். அந்த அபாயத்தை மணிவண்ணன் பதவி ஏற்பு தவிர்த்திருக்கின்றது.

மாநகர நிர்வாகத்தில் ஈ.பி.டி.பி.யின் செல்வாக்கு அதிகரிக்கும் என்றொரு குற்றச்சாட்டு அண்மைய நாட்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மணிவண்ணனுடைய நிர்வாகத்திற்கு கூட்டமைப்பும், முன்னணியும் ஆதரவு கொடுத்தால் ஈ.பி.டி.பி.யின் ஆதரவு தேவைப்படாது. தமிழ்த் தேசியக்கட்சிகளின் ஆதிக்கத்திற்குள்ளேயே மாநகர நிர்வாகத்தை வைத்திருக்கலாம். கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும் முன்னணிக்கு 03 ஆசனங்களும், மணிவண்ணன் தரப்புக்கு 10 ஆசனங்களும் உள்ளன. இவற்றுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 01 ஆசனத்தையும் சேர்த்தால் 30 ஆசனங்கள் கிடைக்கும். இது மொத்த ஆசனங்களில் மூன்றிலிரண்டாகும். 

இவ்வாறு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தமிழ்த் தேசிய தளத்தில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால் ஏற்படுத்த முடியும். அவ்வாறான பெரும்பான்மை கிடைத்தால் மாநகர நிர்வாகத்தை எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் சுமூகமாக நடத்தலாம்.

மணிவண்ணன் தரப்பை முன்னணியின் தலைமை சுமந்திரனிடம் தள்ளிவிட சுமந்திரன் ஈ.பி.டி.பி.யிடம் தள்ளி விட்டது போன்ற நிலை வரக்கூடாது. மணிவண்ணனோடு இருக்கும் இளைஞர்களை எதிரியிடம் தள்ளுவது தமிழ்த் தேசிய அரசியலுக்கு என்றைக்குமே ஆரோக்கியமாக இருக்கப் போவதில்லை. 

ஏனென்றால், மணிவண்ணுக்கு அடிக்கப்படும் சேறு, அரசியலுக்குச் சென்றால் இது தான் நிலை என்ற மனோநிலை  இளைஞர்களுக்கு ஏற்படும். அவ்வாறான மனோநிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் இளைஞர்கள் எவரும் தமிழ் அரசியலுக்கு வரப்போவதில்லை.

யாழ்.மாநகர சபை விடயத்தில் கட்சி அரசியலை நடாத்துவது முழுமாவட்டத்தையும் பலவீனமாக்கும் தமிழ்த் தேசிய சக்திகள் இந்த அபாயங்களை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். தற்போதது, சுய பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்தித்தால் யாழ்.மாநகர சபை தமிழ்த் தேசியத்தின் வசம் தொடரும். அதுவே தமிழ்த் தேசிய வாக்களர்களுக்கும் ஆரோக்கியமானது.