(செ.தேன்மொழி)

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பொது வாகனங்கள், பாடசாலை பஸ்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

முதலாம் தவணைக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் சுகாதார விதிமுறைகளுக்கமைய இன்று திங்கட்கிழமையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் கல்வி நடவடிக்கைகளை போன்று சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும்.  மாணவர்கள் ஒருவருக்கொருவர் முகக்கவசங்களை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் இன்னுமொரு மாணவர் அணிந்திருக்கும் முகக்கவசத்தை ஸ்பரிசம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதனால் , பெற்றோர்கள் அது தொடர்பில் தங்களது பிள்ளைகளுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தியதன் பின்னரே பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதேவேளை , மாணவர்களை ஏற்றிச் செல்லும் பொது வாகனங்கள் , பாடசாலை பஸ்கள் , வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் சுகாதார வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தி , அந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு ஆலாசனை வழங்கி தெளிப்படுத்துவதற்காக போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  இதன்போது , சிறுவயதுடைய மாணவர்களை  அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பில் விசேட கவன செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், வாகன சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள், மாணவர்கள் வாகனத்திற்குள் பிரவேசிக்கும் போதும் , வாகனத்திலிருந்து இறங்கும் போதும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பது தொடர்பில் கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். இதன்போது மாணவர்கள் யாருக்காவது சுகயீனம் ஏற்பட்டால் , அது தொடர்பில் அவர்களின் பெற்றோருக்கு அல்லது சுகாதார பிரிவினருக்கு உடனே தகவல் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.