அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வந்தது.

இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் சத உதவியுடன் 338 ஓட்டங்களை குவித்தது. அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனால் 94 ஓட்ட முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 29 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களை பெற்று, 197 ஓட்டங்களினால் முன்னில‍ை பெற்றிருந்தது.

நேற்று நான்காம் ஆட்டம் தொடர்ந்த நிலையில் லபுஸ்சேன் 73 ஓட்டங்களில் விக்கெட் காப்பாளர் சஹாவிடம் பிடிகொடுத்து வெளியேற, வேட் நான்கு ஓட்டத்துடன் சஹாவிடம் பிடிகொடுத்தார். 

அதன் பின்னர் ஸ்மித் 81 ஓட்டங்களுடனும், கிரீன் 84 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக 87 ஓவர்களை எதிர்கொண்டு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 312 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. 

இதனால் இந்திய அணியின் வெற்றிக்காக 407 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 34 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ஓட்டங்களை பெற்றது.

ரோகித் சர்மா 52, கில் 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க புஜரா ஆட்டமிழந்தனர். புஜாரா ஒன்பது ஓட்டங்களுடனும் ரஹானே நான்கு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

5 ஆவதும் இறுதியுமான நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது.  

இதில், லயான் வீசிய பந்தில் வேடிடம் பிடி கொடுத்து ரஹானே 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய ரிஷாத் பந்த் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

இந்தியா, உணவு இடைவேளை வரை 70 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ஓட்டங்களை எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில் ரிஷாத் பந்த் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பினை நழுவ விட்டார்.

அடுத்தபடியாக புஜராவும் 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இந்திய அணி 131 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் நிறைவுபெற இன்னும் ஓரு ஓவர் மீதம் இருந்த நிலையில் போட்டி சமனிலையானது என அறிவிக்கப்பட்டது.  

இதனால் நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது. தொடரின் ஆட்டநாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வானார்.