(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் புதன்கிழமை(13.01.2021) காலை சிறிகொத்தாவில் கூடுகின்ற நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கட்சியின் தலைமைத்துவத்தில் இப்போதைக்கு மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள், கட்சியின் தலைமைத்துவ மாற்றம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர் யார் என்பது குறித்து நீண்டகால பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கான தீர்வுகளை எட்டுவதில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு முடியவில்லை. இந்நிலையில் புதன்கிழமை(13.01.2021) காலையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவை கூட்டி மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராகியுள்ளார்.

இந்நிலையில், செயற்குழு கூட்டத்திற்கு கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் உறுப்பினர் இன்னமும் தெரிவு செய்யப்படாதுள்ள நிலையில் புதன்கிழமை(13.01.2021) கூடும் கூட்டத்தில் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் யார் என்பது குறித்தும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.