-கபில் - 

“ஜெனிவாவுக்கு முன்வைக்கப்படும் ஆவணத்தை தயாரிக்க முனையும் போது, விட்டுக்கொடுப்புகள் என்பதற்கு அப்பால், அதிகபட்ச கோரிக்கையை வலியுறுத்துவதாக இருப்பதில் தவறில்லை. இன்னொரு பக்கத்தில், தமிழ் அரசியல் தலைமைகள், இந்த விவகாரத்தை தமது அற்ப அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வதில் இருந்தும் வெளியே வர வேண்டும்”

போர்க்குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட இலங்கை மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும், பொய் என்பதை, இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிரூபிப்போம் என்று, அரசாங்கம் சவால் விடுத்திருக்கிறது.

இவ்வாறான சூழலில், இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பிரேரணைக்கான, முன்மொழிவு ஒன்றை இணக்கமான முறையில் தயாரிக்கும் முயற்சிகளில், மூன்று பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளும் இறங்கியிருக்கின்றன.

புலம்பெயர் தமிழர்களால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்ட, ஆவணம் தான் இதற்கான முதல் புள்ளியாக அமைந்தது.

அந்த ஆவணத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றுக் கொள்ளவில்லை. சி.வி.விக்னேஸ்வரனும் அதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிராகரித்து விட்டார்.

அந்த ஆவணத்தை ஒட்டி, இவர்கள் மூவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கிய போது, இத்தோடு முடிந்தது இந்த ஒற்றுமை முயற்சி என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், மீண்டும் ஒற்றுமை முயற்சியைக் கையில் எடுத்து கிளிநொச்சியில் முதலாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன். இருந்தாலும், கஜேந்திரகுமார் பங்கேற்கவில்லை. விக்னேஸ்வரன் தனது பிரதிநிதியை அந்தக் கூட்டத்திற்கு அனுப்பினார்.

அதன் தொடர்ச்சியா அடுத்த சந்திப்பை வவுனியாவில் ஏற்பாடு செய்திருந்தார் சிவகரன். தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தாலும், கீரியும் பாம்புமாக – நவக்கிரகங்களாக இருக்கும், தமிழ் அரசியல் பிரமுகர்களை ஒருங்கிணைக்கும் அந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றது.

கடுமையான வாக்குவாதங்கள், காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலும், அந்தக் கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பங்கேற்றது முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளினது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதில் பங்கேற்க வந்த சுமந்திரனைக் கண்டதும், அனந்தி சசிதரன் எழுந்து வெளியே சென்றிருந்தார்.

ஆனால், அவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது திருப்பம் தான். வவுனியா கூட்டத்தில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும், அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை, உடனடியாக அவர் வெளியிட்ட அறிக்கையே சாட்சியாக இருந்தது.

தன்னுடையதல்ல, புலம்பெயர் தமிழரின் முன்மொழிவு தான் என்று தெரிந்ததும் அந்த ஆவணத்தை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டார் என சுமந்திரன் வவுனியாவில் கூறியிருந்தார். அதனை சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்ததுடன், சுமந்திரனைக் கடுமையாக விமர்சித்தும் இருந்தார்.

இவ்வாறான சூழலுக்குள் பொதுஇணக்க ஆவணம் ஒன்று பிறப்பெடுப்பது கடினமான முயற்சியாக இருந்த நிலையில், விக்னேஸ்வரன் தரப்பு தனியானதொரு ஆவணத்தை தயாரித்து முடித்திருந்தது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த ஆவணம், ஏனைய கட்சிகள், பொது அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை ஐ.நா.பொதுச்செயலர், மனித உரிமை ஆணையாளர், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொழும்பில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில், ஜெனிவா தீர்மானத்தில் இடம்பெற வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய ஒரு முன்மொழிவு ஆவணத்தை தயாரிக்க இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், குறித்த முன்மொழிவு ஆவணத்தை தயாரிப்பதற்கான மூவர் குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார், கலாநிதி.சர்வேஸ்வரன் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழு ஆவணத்தை தயாரிக்கும் முயற்சிகளில் உடனடியாகவே இறங்கியிருந்தது. ஜெனிவா தீர்மானத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்களை உள்ளடக்கிய, முன்மொழிவு ஆவணம் ஒன்றை தயாரிப்பதற்கு நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் இணக்கம் ஏற்பட்டுள்ள போதும், அந்த ஆவணத்தில் இடம்பெறும் விடயங்களில் இந்த மூன்று தரப்புகளுக்கும் இடையில் ஒருமித்த நிலைப்பாடு உருவாக்கப்படுவது தான் சிக்கலானது.

ஏனென்றால், மூன்று தரப்புகளினது நிலைப்பாடும் வித்தியாசப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.ஏ.சுமந்திரனின் நிலைப்பாடு, இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம், ஜெனிவாவின் கண்காணிப்பை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதை மையப்படுத்தியதாக இருக்கிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடு, அதற்கு எதிர்மாறானது. அவர், ஜெனிவாவில் இதுவரை நீதி கிடைக்கவில்லை, இனியும் அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பது பயனற்றது. அதற்கு வெளியே இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார். சர்வதேச விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றை நோக்கி இதனை நகர்த்த வேண்டும் என்பது அவரது நிலை.

ஆனால் சி.வி.விக்னேனஸ்வரன் தரப்பு இந்த இரண்டுக்கும் நடுவே, அங்கும் ஒரு கால், இங்கும் ஒரு காலை வைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக, மியான்மாருக்காக உருவாக்கப்பட்டது. போன்றதொரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளை, சர்வதேச தீர்ப்பாயம் போன்ற பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

இவ்வாறான வேறுவேறு நிலைப்பாடுகளைக் கொண்ட தரப்புகள், இணைந்து ஒரே நிலைப்பாடு கொண்ட ஆவணத்தை தயாரிப்பது கடினமான காரியம் தான். அதனை முதலாவது கூட்டமே உறுதி செய்துவிட்டது. விக்னேஸ்வரன் அணியின் சார்பில் பங்கேற்றிருந்த கலாநிதி.சர்வேஸ்வரன் முதல் நாள் கூட்டத்தின் இடைநடுவே வெளியேறிவிட்டார்.

அடுத்து என்ன சாத்தியம் என்ற விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் நடைமுறைச் சாத்தியம், சாத்தியமற்ற தன்மைகளுக்கு அப்பால், சில விடயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்றே தெரிகிறது.

ஜெனிவாவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பு- கோரிக்கைகள் அடங்கிய ஒரு முன்மொழிவே தவிர, அதுதான், பேரவையில் முன்வைக்கப்படக் கூடிய தீர்மானம் அல்ல. இந்த முன்மொழிவை அனுசரணை நாடுகள் ஏற்றுக் கொள்ளலாம் – ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம்.

பொறுப்புக்கூறல் விடயத்தில், தமிழர் தரப்பு ஒன்றுபட்டிருக்கிறது, அதிகபட்ச நீதியை எதிர்பார்க்கிறது என்பதை வெளிப்படுத்துவது தான் முக்கியமானது. இந்த இடத்தில், கஜேந்திரகுமாரின் நிலைப்பாடு சாத்தியமற்றது. பாதுகாப்புச் சபையில் ஆதரவு கிடைக்காது  என்றெல்லாம் மல்லுக்கட்ட வேண்டிய தேவையும் இல்லை.

சுமந்திரனின் நிலைப்பாட்டை ஒட்டி அவரை விமர்சித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. பேரவையில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையானது, அனுசரணை நாடுகளினதும், அதற்கு ஆதரவளிக்கும் நாடுகளினதும் இணக்கப்பாட்டையே முற்றிலும் அடிப்படையாக கொண்டது.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்ற முனையும் போது, அதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு தேவை. அதன் அடிப்படையில் தான், தீர்மானத்தின் கனதியும் காத்திரமும் அமைந்திருக்கும். 

அதற்கான ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக, அனுசரணை நாடுகள், பல்வேறு விடயங்களில் சமரசம் செய்து கொள்ளவும் முற்படலாம். அதைவிட புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலும் இதற்குப் பின்னால் உள்ளது. இவற்றை மறந்து விட்டு, முன்மொழிவு ஒன்றில் நடைமுறைச் சாத்தியங்கள் பற்றி மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதோ, ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வதோ அவசியமற்றது.

இவ்வாறான நிலையில், தமிழர் தரப்பில் அதிகபட்ச கோரிக்கையை முன்னிறுத்தி, யோசனையை முன்வைப்பதில் தவறில்லை. உதாரணத்துக்கு, தமிழர் தரப்பில் 1976ஆம் ஆண்டில் தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, அது இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்று அல்ல என்பது, அப்போதிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியும்.

இப்போதும் கூட, சமஷ்டித் தீர்வை கோருகின்ற தமிழ் அரசியல் தலைவர்களுக்கு, அந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் நிறைவேற்றப் போவதில்லை என்றும் தெரியும்.

ஆனாலும், இந்தக் கோரிக்கைகளை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இங்கு நடைமுறைச் சாத்தியம் - சாத்தியமற்ற தன்மை குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அதுபோலத் தான், அதிகபட்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் போது தான், குறைந்தபட்ச கோரிக்கையாவது கவனத்தில் எடுக்கப்படும். இது உலக நியதி.

எனவே, ஜெனிவாவுக்கு முன்வைக்கப்படும் ஆவணத்தை தயாரிக்க முனையும் போது, விட்டுக்கொடுப்புகள் என்பதற்கு அப்பால், அதிகபட்ச கோரிக்கையை வலியுறுத்துவதாக இருப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை. இன்னொரு பக்கத்தில், தமிழ் அரசியல் தலைமைகள், இந்த விவகாரத்தை தமது அற்ப அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வதில் இருந்து வெளியே வர வேண்டும். இப்போதும் கூட, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி – பழிபோட்டுக் கொள்ளும் அரசியலையே  முன்னெடுக்கின்றனர்.

ஜெனிவா விவகாரத்தில், தமிழர் தரப்பு ஒரு கருவியே தவிர,  அதனை எப்படிக் கையாளுவது தீர்மானிக்கும் தரப்பு அல்ல. இங்கு, தமிழர் தரப்பை விரும்பியோ விரும்பாமலோ, வெளித்தரப்புகள் தான் கையாள முனையும்.

அவ்வாறான நிலையில், ஒன்றுபட்டு நிற்பதை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, முரண்பாட்டுச் சூழலை பிரதிபலிக்கும் போது வெளித்தரப்புகளுக்குத் தான் அது சாதகமானதாக இருக்கும். அத்தகைய வாய்ப்பை விட்டுக்கொடுக்காமல் இருப்பது தான் இப்போது முக்கியம்.