யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு கண்டத்தை வெளியிடும் வகையில் இன்று வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன.

ஹர்த்தாலுக்கு யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் இன்று இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த உறவுகளை நினைகூருவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை அகற்றியமையினால் உறவுகளை இழந்து வாழும் சகோதா உறவுகளின் மனங்கள் எவ்வளவு கவலையடைந்திருக்கும் என்பதை நாம் அறிவோம் என யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம் அந்த உறவுகளின் துயரத்தில் முஸ்லீம் மக்களாகிய நாம் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், யாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக  இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று  திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைகழக மாணவர் அமைப்பு,  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஆகிய கட்சிகளும், வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பு அனைவரும் ஒன்றாக கடந்த சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும்  வடக்கு, கிழக்கில் இன்று  ஹர்த்தால் இடம்பெறவுள்ள நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது