(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு எனக்கு எதிராக கதைக்கலாம். ஆனால் எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்க முடியாது. அதனால் விமல் வீரவன்ச முடியுமானால் என்னை கைதுசெய்து காட்டட்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்தொன்றை முன்வைத்து, அவரை கைதுசெய்யவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக  தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கொவிட்டில் மரணிப்பவர்களை வைத்துக்கொண்டு நாங்கள் அரசியல் செய்வதாக விமல் வீரவன்ச தெரிவித்திருக்கின்றார்.

அதேபோன்று கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அரசாங்கம் எரிப்பதற்கு என்றைக்காவது அதற்கான நஷ்டஈட்டை செலுத்தவேண்டிவரும் என நான் தெரிவித்திருந்த கருத்தை வைத்துக்கொண்டு என்னை கைதுசெய்யவேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார் என்பதற்காக பொலிஸ்மா அதிபர் என்னை கைதுசெய்யப்போவதில்லை. எனக்கு எதிராக தெளிவான குற்றச்சாட்டு இருக்கவேண்டும்.

முடியுமானால் என்னை கைதுசெய்யுமாறு விமல் வீரவன்சவுக்கு நான் சவால் விடுகின்றேன். அத்துடன் இந்திய ஊடகமொன்றுக்கும் கடந்த காலங்களில் தெரிவித்திருந்த கருத்தொன்றுக்காக நான் கைதுசெய்யப்பட்டு, பின்னர் சத்தியக்கடதாசி சமர்ப்பித்து வெளியில் வந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

சத்தியக்கடதாசி சமர்ப்பித்து வெளியில்வர நான் விமல்வீரவன்ச போன்ற வங்குராேத்து அரசியல் செய்பவன் அல்ல. 10க்கும் மேற்பட்ட சத்தியக்கடதாசி எனக்கு வழங்கப்பட்டது.

அவை அனைத்தையும் கழித்தெறிந்தேன். என்னை கைதுசெய்த அதிகாரி இன்றும் இருக்கின்றார். என்னை எவ்வாறு கைதுசெய்தது, எவ்வாறு விடுவித்தது என்பதை அவரிடம் கேட்டுப்பார்க்கட்டும்.

மேலும் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக இருந்த காலத்தில், என்னால் ஏதாவது மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றதா என தேடிப்பார்க்க மஹிந்த ராஜபக்ஷ, குற்றப்புலனாய் அதிகாரிகளை நியமித்திருந்தார்.

18 மாதங்களாக தேடியும் எந்த மோசடியையையும் கண்டுபிடிக்க முடியாமல்போனது. அதனால் எமக்கு எதிராக அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு பேசலாம். ஆனால் எந்த மோசடி குற்றச்சாட்டையும் தெரிவிக்க முடியாது.

அத்துடன் கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை வைத்துக்கொண்டு நாங்கள் அரசியல் செய்யவில்லை. அரசாங்கமே அரசியல் செய்துகொண்டிருக்கின்றது.

மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்கள் பலரும் உறுதியாக தெரிவித்தும் அரசாங்கம் அதனை அனுமதிக்காமல், வேண்டுமென்றே முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்து வருகின்றது. 

கொவிட் தொடர்பான அனைத்து விடயங்களையும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரம் நடவடிக்கை எடுத்துவரும் அரசாங்கம், மரணிப்பவர்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்வதில்லை. இது முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுவதாகும் என்றார்.