(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் தகர்த்தப்பட்டமைக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

எனினும் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்வொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை சமிக்ஞை படையணியினது மினேரியாவில் புதிதாக கட்டப்பட்ட அதன் 'மிரிடிய பவன விடுமுறை விடுதியினை சனிக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத்தளபதி இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

யாழ்ப்பாண பல்கலைகழத்தில் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து சிறந்த தீர்வொன்றை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எனினும் இராணுவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் துணை வேந்தர் ஆகியோர் எதிர்வரும் நாட்களில் ஏதேனுமொரு நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இதன் போது கொவிட் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி,  

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது கொவிட் கட்டுப்படுத்தலில் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளன என்பதை தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இதற்கு அத்தியாவசியமானதாகும். 

இவ்வாறான நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாத காலமாக வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. இதற்கு பிரதான காரணி நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தமையைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையங்கள் பல இடை நிலை பராமறிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டன.

எவ்வாறிருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் ஹோட்டல்களில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபடலாம் என்றார்.