(செ.தேன்மொழி)

நிதி முறைகேடு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க மற்றும் அஞ்சலி தீபா எதிரிசிங்க ஆகியோர் 6.4 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் , கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் , சந்தேக நபர்களுக்கு பிணைவழங்கினால் , அவர்களுடான சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படவாய்ப்புள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே நீதிவான் அவர்களை ,  நாளைமறுதினம் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதற்கமையவே சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக முன்னாள் பணிப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க ஆகியோர் கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலும் , அஞ்சலி தீபா எதிரிசிங்க களுத்துறை சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.