அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தொடர்பில் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தால் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் யுத்த காலத்தில் மரணித்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து அடக்குமுறைகளை பிரயோகித்து வருகின்றது. அதன் நீட்சியாக தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. 

யாழ் பல்கலைக்கழகத்தில் வடக்கு-கிழக்கு பகுதியைச் சேர்ந்த பல மாணவர்களின் தாய், தந்தையர்கள்,சகோதாரர்கள், உறவினர்கள் மட்டுமன்றி விரிவுரையாளர்கள் கூட முள்ளியவாய்கால் மண்ணில் மரணித்துள்ளார்கள். அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அழிக்கப்பட்டமையானது தமிழ் மக்கள் மனங்களில் பாரிய காயங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொவிட் -19 தாக்கத்தால் மரணித்த முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களைக் கூட அடக்கம் செய்வதற்கு மறுத்து வரும் இந்த அரசாங்கம், தற்போது தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமையையும் மறுத்து வருகின்றது. ஐ.நா மனிதவுரிமை பேரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரமான  மத வழிபாடு, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை என்பவற்றை அப்பட்டமாக மீறியுள்ள கோட்டா - மஹிந்த அரசாங்கம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக காட்டு மிராண்டித்தனமான ஆட்சியை கொண்டு நடத்துகின்றது. இந்த அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாடு இந்த நாட்டை மேலும் ஒரு மோசமான நிலைக்கே கொண்டு செல்லும்.

இந்நிலையில் யாழ் பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இடித்து அழித்தமைக்கு எதிராக வடக்கு- கிழக்கு பகுதியில் நாளை (11.01) முன்னெடுக்கப்படவுள்ள  பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்துகள், உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டு பூரண ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக ஓரணியில் குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.