(நேர்காணல்:- ஆர்.ராம்)

  • இலங்கைப்படைகள் இழைத்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தற்போது ஆழ்ந்து வருத்தப்பட மட்டுமே முடியும் 
  • போர் தந்திரோபாயமாகவே இலங்கை துறைமுகங்களில் ‘டாங்கி’களை ஏற்றி இறக்கவல்ல பாரந்தூக்கிகளை பொருத்தியுள்ளது சீனா
  • இலங்கையில் போர் நிறைவடைந்தவுடன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இந்தியா, தவறிவிட்டது.


ஆசியப்பிராந்தியத்தில் போர் மூளுவதற்கான சாத்தியங்கள் இல்லாமலில்லை. சீனா அதற்கான சந்தர்ப்பங்களையே எதிர்பார்த்துக் காத்திருப்பதோடு போருக்கான தயார்ப்படுத்தல்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது என்று  இந்திய இராணுவத்தின் மேஜர் (ஒய்வுநிலை) மதன்குமார் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தொலைபேசி ஊடாக வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் இறுதிப்பகுதி வருமாறு,

கேள்வி:- சீனாவினால், முன்னெடுக்கப்பட்டுள்ள கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் அதற்கு அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆகியவற்றை இந்தியா தனது தேசியப்பாதுகாப்பினை மையப்படுத்தி கரிசனை கொள்கின்றதா?

பதில்:- நிச்சயமாக, இந்து சமுத்திரத்தின் பெரும்பங்கு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இக்கடற்பிராந்தியத்தின் ஊடாக அதிகளவு வர்த்தக ரீதியான போக்குவரத்தினை சீனா கொண்டிருக்கிறது. அது சுதந்திரமான, சுயாதீனமான கடற்பயணச் செயற்பாடுகளையே அதிகம் விரும்புகின்றது. 

இதன் காரணமாகவே முதலில் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனா தன் வசப்படுத்தியது. பின்னர் கொழும்புத் துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தினை நிர்மாணிக்கும் பொறுப்பைப்பெற்று அதனை முன்னெடுத்தது. ஏற்கனவே கூறியது போன்று இந்துசமுத்திரக் கடற்பிராந்தியத்தில், போர் மூளுமாக இருந்தால் சீனா, இலங்கையின் நிலப்பரப்பினையும், கடற்பரப்பினையும் அதியுச்ச அளவில் பயன்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி இலங்கையை மையப்படுத்தி ஏனைய சமுத்திரப்பிராந்தியங்களுக்குச் செல்வதற்கான வழிகள் காணப்படுகின்றன. 

ஆகவே தான், இலங்கையின் துறைமுகங்களின் அபிவிருத்திகளை சீனா பொறுப்பேற்கிறது. அங்குள்ள கொள்கலன் முனையங்களை வினைத்திறன் மிக்கவையாக மேம்படுத்துவதாகவும் கூறுகின்றது. இதன் பின்னணியில், போருக்கான தந்திரோபாயமே மறைந்துள்ளது. அதாவது, அம்பாந்தோட்டை, கொழும்பு போன்ற துறைமுகங்களில் சீனாவின் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட கொள்கலன் முனையங்களில் உள்ள புதிய பாரந்தூக்கிகளை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்கின்றபோது நிலைமையை உணரமுடியும். அவை, சாதாரண கொள்கலன்களை மட்டும் ஏற்றி இறக்குவதற்காக நிர்மாணிக்கப்படவில்லை. அவற்றின் மூலம் டாங்கிகளையே ஏற்றி இறக்க முடியும். அவ்வளவு சக்திவாய்ந்தவையாக உள்ளன. அவ்வாறான பாரந்தூக்கிகள் சாதாரண வர்த்தக துறைமுகங்களில் எதற்காகப் பொருத்தப்பட வேண்டும்.

கேள்வி:- நான்காம் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின் போது, நிகழ்ந்த மனிதாபிமானத்திற்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் அதிகரிக்கின்றபோது, ‘இந்தியாவும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவியது’ என்று இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றமை எவ்வாறு பார்கின்றீர்கள்? 

பதில்:- இலங்கையில் நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவரும் செயற்பாட்டில் இந்தியாவின் பங்களிப்பு நேரடியாக இருக்கவில்லை. உளவுத்துறை சார்ந்த விடயங்கள் பகிரப்பட்டிருக்கலாம். ஏனென்றால் அயலில் உள்ள இரு நாடுகளினதும் இறைமை, தேசியப் பாதுகாப்பு, ஆட்புல எல்லை பாதுகாப்பு தொடர்பில் பரஸ்பர தகவல்களை பரிமாற்றுவது தொடர்பான உடன்படிக்கை காணப்படுகின்றது. 

அதேநேரம், பங்களாதேஷை தனி நாடாக அங்கீகரிப்பதை மையப்படுத்தி இந்தியா, பாகிஸ்தான் மோதல் இடம்பெற்றபோது ‘முக்தி வாஹினி’ அமைப்புக்கு இந்தியா ஆயுத பயிற்சி அளித்தது. அந்த விடுதலை இயக்கத்தினை அங்கீகரித்தது. பின்னர் அதன் தலைவர் முஹிபுர் ரஹ்மான் பங்களாதேஷின் தலைமைத்துவத்தினை ஏற்கும்போது 45நாடுகள் அங்கீகாரம் அளித்தன. 

தமிழீழ விடுதலைப்புலிகள் விடயத்தில் ஆரம்பத்தில் இந்தியாவின் ஆதரவும், ஒத்துழைப்பும் இருந்தாலும் 2001 செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பூகோள நிலைமைகள் மாற்றமடைந்திருந்தன. அச்சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சர்வதேச ரீதியாக தடைகள் காணப்பட்டன. விதிக்கப்பட்டன. விடுதலையை மையப்படுத்தி அந்த அமைப்பு செயற்பட்டிருந்தாலும் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. 

ஆகவே விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு  என்றவகையில் சர்வதேச பயங்காரவாதத்திற்கு எதிராக நாடுகளுக்கு இடையில் உள்ள  நடவடிக்கைகள் தொடர்பிலான சட்டங்கள், உடன்பாடுகளுக்கு அமைவாகவும் இலங்கைக்கு இந்தியா உதவியிருக்கலாம். ஆனால், இலங்கையில் போர் நிறைவுக்குவந்ததும் அங்கு நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, இந்தியா தலையீட்டைச் செய்திருக்க வேண்டும். அரசாங்கத்திற்கும், தமிழ்த் தரப்பிற்கும் இடையில் ‘வலிமையான மத்தியஸ்தத்தினை வகித்து’ பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். 

அப்போதைய மத்திய அரசு பின்னடித்துவிட்டது. அதன் காரணமாகவே தற்போது இவ்விதமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையும் இந்த விடயத்தினை மிக இலாவகமாக பயன்படுத்துகின்றது. அதாவது, அரசியல், பாதுகாப்பு இரண்டையும் கலந்ததொரு இராஜதந்திர மூலோபாயமாக கையாளுகின்து.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, பாதுகாப்புச் சபை என்று அனைத்து தளங்களிலும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் விடயத்தில் சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு துணையாக இருப்பதாக வெளிப்படையாகவே கூறிவிட்டது. ஆகவே அந்த விடயங்களில் இந்தியா மாறுபட்ட நிலைமையொன்றை எடுக்குமாக இருந்தால் இந்தியா சீனாவின் பக்கம் முழுமையாக சாய்ந்துவிடும் ஆபத்தும் உள்ளது. இதன் காரணமாகவே, சர்வதேச தளங்களில் இலங்கை தொடர்பில் இந்தியா நடுநிலைமை நிலைப்பாட்டை எடுத்து இராஜதந்திரமான அணுகுமுறைகளைச் செய்கின்றது. 

கேள்வி:- இலங்கைப் படைகள் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக பல்வேறு தளங்களில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ள போதும், அரசாங்கம் படைகளை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. இராணுவ அதிகாரி என்ற வகையில் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் படைகள் மீது சுமத்தப்படுகின்றபோது, அரசாங்கம் அல்லது படை நிருவாகம் எவ்விதமாக கையாண்டிருக்க வேண்டும் என்று கூறுவீர்கள்?

பதில்:- இந்த விடயத்தில் எனக்கு நேரடியாகவுள்ள அனுபவத்தினை பகிர்ந்து கொள்கின்றேன். காஷ்மீரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, இராணுவம் அத்துமீறல்களைச் செய்ததாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. விசாரணைகளுக்கு வலியுறுத்தல்களைச் செய்தன. 

அதனடிப்படையில் இராணுவ மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இராணுவ அதிகாரி, குற்றவாளி, என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். எனினும் சட்டரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.  அத்துமீறலுடன் தொடர்புடைய அவர் உள்ளிட்டவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் இந்திய மத்திய அரசு எவ்விதமான தலையீடுகளையும் செய்திருக்கவில்லை. 

ஆனால் இலங்கை விடயத்தில் அவ்வாறில்லை. ஜனநாயகத்தினை தாங்கும் மூன்று கட்டமைப்புக்களிலும் இந்த விடயம் பேசுபொருளாகியிருக்கவில்லை. அரசாங்கம் பகிரங்கமாகவே மறுத்தது. எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தினை மையப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கான சக்தியைக் கொண்டிருக்கவில்லை. நீதித்துறையும் மௌனமாகவே இருந்துவிட்டது.

இந்த நிலையில் தான் சர்வதேசம் நோக்கி தமிழர்கள் சென்றிருந்தார்கள். ஆனால் ஐ.நா.மன்றம் உட்பட சர்வதேச தளங்களில், புலம்பெயர் தமிழர்களுக்கு நிகராக இலங்கை அரசாங்கத்திற்காக பேசவல்ல தரப்புக்களும் இருந்தன. குறிப்பாக போர் நிறைவடைந்ததும், அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி, தாய் மண்ணை வணங்கி முத்தமிட்டமை பல செய்திகளை வெளிப்படுத்தியது. அச்செயற்பாடு ஐரோப்பாவில் இலங்கை அரசாங்கத்துக்காக பலமான தரப்புக்கள் மேலெழுவதற்கும் வழிவகுத்தது. 

இதனால் புலம்பெயர் தமிழ்த் தரப்புக்களால் இந்த விடயத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிந்திருக்கவில்லை. அதேநேரம், பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா போன்றவையும் இந்த விடயத்தினை கையிலெடுப்பதற்கு தயாராகியிருக்கவில்லை. 

ஐ.நா.வின் கட்டமைப்புக்களும் இந்த விடயத்தில் வரையறையுடனேயே செயற்பட்டன. அந்த அமைப்புக்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கத்தினை கைவிட்டுச் செயற்படுவதாக பிரதமர் மோடி அண்மையில் கூறினார். அது இலங்கை விடயத்திற்கும் பொருந்தும். அவ்விதமான நிலைமையால் தான் இந்த விடயம் கிடப்பில் போயுள்ளது. 

போர்க்குற்ற விசாரணைகள் ஆக்குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவ்விதமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. போர் நிறைவடைந்த வேளையோடு, அமெரிக்காவோ அல்லது அண்டை நாடான இந்தியாவோ இந்த விடயத்தில் கரிசனை காட்டி நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அவ்விதமான செயற்பாடுகள் நடைபெறவில்லை. தற்போது 11ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆகவே போர்க்குற்றங்கள் தொடர்பில் ‘ஆழ்ந்து வருத்தப்பட மட்டுமே’ முடியும். 

ஒருவேளை, எதிர்காலத்தில் இலங்கைப் படைகளை விசாரணை குழுவின் முன்னால் நிறுத்தினாலும் எதிர்பார்க்கப்படும் அடைவுமட்டம் கிடைக்கும் என்று கருதமுடியாது. இந்நிலைமையானது பாதிக்கப்பட்ட தரப்புக்களின் பக்கமிருந்து பார்க்கின்றபோது மிகவும் கவலைக்குரிய விடயமே. 

கேள்வி:-இறுதியாக, உலகைத் தலைமை ஸ்தானத்தினை அடைவதை இலக்காகக் கொண்டு அரசியல், பொருளாதார மூலோபாய அடிப்படையில் நகர்வுகளை முன்னெடுக்கும் சீனா ஆயுத ரீதியான போரில் ஈடுபடுமென எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

பதில்:- ஆசியக் கண்டத்தில் எட்டுக்கும் அதிகமான நாடுகளுடன் சீனா முரண்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆகவே மூன்றாம் உலகப்போருக்கான வாய்பினையே எதிர்பார்த்திருக்கின்றது. அதுவரையில் தான் ஆயுதங்களில் நம்பிக்கையற்றதொரு நாடாகவே காண்பித்துக்கொண்டிருக்கும். 

இதற்கு அண்மித்த உதாரணமொன்றைக் கூறுகின்றேன். சீனாவின் வுஹானில் நவம்பருக்கு முன்னதாக கொரோனா பரவல் ஆரம்பித்துவிட்டது. மார்ச்சில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக கூறி வுஹான் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகள் கொரோனா பரவலால் முடக்கல் நிலைக்குள் சென்றன. ஆசியப்பிராந்தியத்திலும் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்திருந்தன. அதுமட்டுமன்றி சீனாவிடத்திலேயே கொரோனா பரிசோதனைக் கருவிகள், மற்றும் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்களையும் ஆசிய, மற்றும் ஏனைய சர்வதேச நாடுகள் எதிர்பார்த்திருந்தன. 

அனைத்து நாடுகளுக்கும் உள்நாட்டில் நெருக்கடிகள் அதிகரித்திருந்த தருணத்தில் தான் சீனா தனது படைகளை முன்னகர்த்தியது. இந்தியாவில் லடாக் வழியாகவும், தாய்லாந்து, வியட்நாம் தாய்வான் உள்ளிட எல்லைகளிலும் சீனப் படைகள் நகர்ந்தன. லடாக்கில் சீனப்படைகளை, இந்தியா எதிர்த்து நின்றபோது அது சீனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இந்தியா எதிர்க்கும் என்று சீனா எதிர்பார்க்கவில்லை. இதனால் சீனாவுக்கு ஏனைய நாடுகளின் எல்லைகள் ஊடாக நகர்வுகளையும் நிறுத்த வேண்டியதாயிற்று. 

இவ்வாறான செயற்பாட்டை சீனா இத்துடன் கைவிட்டுவிடாது. எதிர்காலத்தில் மீண்டும் அதற்கான வாய்ப்பொன்று கிட்டுமா என்றே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறு வாய்ப்பு கிடைக்கின்றபோது  பயன்படுத்துவதற்கான சகல தயார்ப்படுத்தல்களையும் சீனா அனைத்து தளங்களிலும் மேற்கொண்டவாறே இருக்கும். அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ இந்தியா உட்பட எந்த ஆசிய நாடும் பலவீனமான நிலைமையை அடையும் போது சீனா அந்த சந்தர்ப்பத்தினை தனக்குச் சாதகமாக பயன்படுத்த தவறாது. 

இந்தியா இதனை நன்கறிந்தே முன்னெச்சரிக்கை நகர்வுகளை செய்து வருகின்றது. இதில் யார் முந்திக்கொள்கின்றார்களோ அவர்களின் கையே ஓங்கும் என்ற புரதல் இந்தியாவுக்கு உள்ளது.