யுத்தத்தில் மரணித்தவர்களது நினைவாலயங்களை அழிப்பதும் நினைவுதினங்களை பல்வேறு காரணங்களை கூறி தடுத்து நிறுத்துவதும் இந்தநாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. மாறாக பிரச்சனைகளை உக்கிரப்படுத்துவதாகவே அமையும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கோரமான யுத்தத்தின் அடையாளங்களை அழிப்பதால் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது.

இந்தநாட்டில் அரசியல், பொருளாதார, சமூக உரிமைக்காக எண்ணிக்கையில் சிறுபாண்மையின மக்கள் முன்னெடுத்த 70 ஆண்டுகால உரிமை போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை அழிப்பதனூடாக மக்கள் மனங்களில் இருந்து அவற்றை அழிக்கமுடியாது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்தத்தில் மரணித்தவர்களது நினைவாலயங்களை அழிப்பதும் நினைவுதினங்களை பல்வேறு காரணங்களை கூறி தடுத்து நிறுத்துவதும் இந்தநாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. மாறாக பிரச்சனைகளை உக்கிரப்படுத்துவதாகவே அமையும்.

இந்தநாட்டில் நிலையான சமாதானமும் அபிவிருத்தியும் ஏற்படுவதை அரசாங்கம் விரும்புமேயானால் இவ்வாறான நடவடிக்கைகளை இனிமேலாவது செய்யாது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.