யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுதூபி இடித்து தகர்த்தப்பட்டுள்ளமைக்கு இந்திய அரசியல் தலைவர்களான தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்  மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள்.

டுவிட்டர் பதிவுகள் ஊடாகவும் , அறிக்கைகள்  ஊடாகவும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள அவர்கள் இந்த சம்பவத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட வேண்டும் என்பது உலக தமிழர்களின் எதிர்பார்ப்பென வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவே இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூண் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடித்து தகர்த்தப்பட்டுள்ளது. ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்துவம் இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக் கொள்ளமுடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள். பாரதப்பிரதமர் நரேந்திர மோடி இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும். இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கையொன்றினை வெளியிட்டு அதில் கூறியிருப்பதாவது,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவு தூண் சிங்கள அரசால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது. சிங்கள அரசின் இந்த இனவெறித் தாக்குதலை, ஆணவப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாழ்ப்பாண பல்கழைக்கழகத்துக்குள் அந்த நினைவு தூணை மீண்டும் நிறுவ வேண்டுமென சிங்கள அரசை வலியுறுத்துகின்றோம்.

தமிழர்களின் விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலையை உலகமே கண்டித்தது. ஜ.நா. பொது மன்றம் அதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கழைகலகத்தில் மாணவர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்களை நினைவு கூர்ந்திடும் விதமாக நினைவு தூண் ஒன்றைப் பல்கலைகழக வளாகத்துக்குள் நிறுவினார்கள்.

யாருக்கும் இடையூறு இல்லாமல் ஒதுக்குப்புறமாகவே அந்த நினைவு தூண் நிறுவப்பட்டது. இனவெறி அரசின் வலியுறுத்தலால் அந்த நினைவு தூணை அகற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியது. அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இராணுவத்தையும் காவல்துறையையும் பயன்படுத்தி அந்த நினைவு தூணை சிங்கள பேரினவாத அரசு இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறது. இனப்படுகொலைக்கு நீதி வழங்காதது மட்டுமன்றி அதை நினைவு கூர்வதற்கும் கூட அனுமதிக்க மாட்டோம் என்று சிங்கள பேரினவாத அரசு கொக்கரிக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவே இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. சீன அரசின் கூட்டாளியாக மாறி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இலங்கை அரசை இந்தியா இப்போதும் நட்பு சக்தியாகக் கருதுவதும் ஈழத்தமிழர் நலனை முற்றாக புறக்கணிப்பதும் சரியான அணுகுமுறை அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.  யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடிக்கப்பட்ட நினைவு தூணை மீண்டும் நிருவ வேண்டும் என்று சிங்கள அரசை வலியுறுத்துகின்றோம்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை பெரும்பான்மையின அரசு செய்துள்ளது. இந்திய அரசு, பெரும்பான்மையின அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது என  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதேபோன்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.


சீமான்


மேலும் கனேடிய அரசியல்வாதிகளான ஸ்கார்பரோ மாநில பாராளுமன்ற உறுப்பினரான கேரி ஆனந்தசங்கரி, பிராம்ப்டன் மாநில மேயரான பற்றிக் பிரவுன், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஆகியோரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

போரில் இறந்தவர்களை நினைவுகூறும் தூபியை அழிப்பது மிகவும் இழிவான செயல் எனவும் இலங்கை அரசு செய்யும் இந்த அநீதிக்கு எதிராக நீதியும் பொறுப்புக்கூறலும் மேலெழ வேண்டும் என்றும்  என்று கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில்  உயிரிழந்தவர்களின் நினைவுச்சின்னங்களை அழிப்பதென்பது இன்னுமோர் கட்டமைக்கப்பட்ட இன ஒழிப்பாகும். இதற்கு எதிராக கனடா மற்றும் சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என்று பற்றிக் பிரவுன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ் பல்கலைக்கழகத்துக்குள் உள்ள நினைவுத்தூபியை இலங்கை அரசு புல்டோசர்களால் இடித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போரால் உயிரிழந்தவர்களின் நினைவுகளை சுமந்த தூபியை ஒரு அரசாங்கம்  இடிப்பதென்பது மிக்க  கண்டனத்துக்குரியதாகும் என விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.