(நா.தனுஜா)
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத்தூபி அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நேற்று  இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டது. அதனைக் கண்டித்து யாழ்.பல்கலைகழக  மாணவர் ஒன்றியத்தினாலும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் கண்டனப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அதில் மேலும் கூறியிருப்பதாவது:

'தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது போல் தெரிகிறது. பெரும்பான்மை மதவெறிக்கு அடிபணிந்து, உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இலங்கை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது" என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.