(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய கால அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள இனவாதத்தை தூண்டி வராலாம். ஆனால் எதிர்கால எமது பிள்ளைகள் இந்த இனவாத பொறிக்குள் சிக்கிக்கொள்வதை நீண்டகாலத்துக்கு தடுக்க முடியாதுபோகும். அதனால் இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் தற்போதைய கொவிட்19 ஐ கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் பலவீனம் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆட்சியாளர்கள் எப்போதும் இனவாதத்தை தூண்டவே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாட்டில் பிரச்சினை ஒன்றுவரும்போது இனவாதத்தை தூண்டி அதனை மறைக்கவே முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதன் விளைவாகவே 30 வருட யுத்தத்துக்கு காரணமானது. அதனால் நாங்கள் இழந்தவை எண்ணிலடங்காதவை. அதனால் அவ்வாறானதொரு நிலைமை இனி எமக்கு தேவையில்லை.

ஆனால் தற்போதும் கொவிட் பிரச்சினைக்குள்ளும் ஆட்சியாளர்கள் இனவாதத்தை தூண்ட ஆரம்பித்திருக்கின்றனர். ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, அரசியல் வியாபாரிகளும் தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள இனவாதத்தை  தூண்டி வருகின்றனர். ஆட்சியாளர்கள் இனவாதத்தை தூண்டினாலும் நாட்டு மக்கள் இனவாதிகளாகவில்லை. ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய கால அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இனவாதத்தை தூண்டி வராலாம். ஆனால் எதிர்கால எமது பிள்ளைகள் இந்த இனவாத பொறிக்குள் சிக்கிக்கொள்வதை நீண்டகாலத்துக்கு தடுக்க முடியாதுபோகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும் கொவிட்டில் மரணிக்கும் சடலங்களை எரிப்பதா?அடக்குவதா? என்ற பிரச்சினை எழுந்திருக்கின்றது. ஆரம்பமாக நாங்கள் ஒரு சமூகத்தின் மத நம்பிக்கையை மதிக்கவேண்டும். சடலங்களை எரிப்பதால் முஸ்லிம்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன் பின்னரே சடலங்களை அடக்குவதா? தகனம் செய்வதா? என்ற தீர்மானத்துக்குசெல்லவேண்டும். ஆனால் முஸ்லிம்களின் பொதுவான நம்பிக்கையை நிராகரித்துக்கொண்டே அரசாங்கம் செயற்படுகின்றது.

அரசாங்கம் கொண்டுவந்த 20ஆவது திருத்தத்துக்கு ரவூப் ஹக்கீம், ரஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். அப்போது கைதட்டி அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களின் பிரச்சினையை தெரிவிக்கும்போது இனவாதமாக பார்க்கின்றனர். இது நியாயமா? அதனால் 20க்கு வாக்களித்த முஸ்லிம் உறுப்பினர்கள் வெட்கப்படவேண்டும். அத்துடன் நாட்டில் மீண்டும் இனவாத்தை தூண்டும் பிரியத்தனத்தை இன்று அரசாங்கத்தில் இருக்கும் ஒரு குழு மேற்கொண்டு வருகின்றது. அது தொடர்பான சிறுசிறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால் ஆட்சியாளர் தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இனவாதத்தை தூண்டினாலும் இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்றார்.