(செ.தேன்மொழி)

காலி –போத்தலை பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் இளைஞன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக அவரது தாயார் மற்றும் அயல் வீட்டு பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போத்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோனபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக அவரது தாயார், அவரது உறவினர் ஒருவரும் அயல் வீட்டு பெண்ணொருவர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காசியதெனிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ,சந்தேக நபரான இளைஞர் பாடசாலை மாணவியான குறித்த சிறுமியை அழைத்துச் சென்றுள்ளதுடன் , பாணந்துறை பகுதியில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பெற்றுக் கொண்டு அங்கு இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்தே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் சனிக்கிழமை நீதிவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதற்காக உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.