(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு உலகளாவிய ரீதியில் 185 இற்கும் அதிகமான நாடுகள் அனுமதியளித்திருக்கின்றன. எனினும் எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கும் நோக்கிலேயே சடலங்களைக் கட்டாயம் தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை அடிப்படையிலான சதியை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்று இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், தன்னைப்பற்றிப் பிழையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச மீது இன்று முறைப்பாடு அளித்துவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதென்பது உலக சுகாதார ஸ்தாபனத்தினாலும் 185 இற்கும் அதிகமான சர்வதேச நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும் கூட, எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கும் நோக்கிலேயே சடலங்களைக் கட்டாயம் தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை அடிப்படையிலான சதி அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அரசியல் ஞானமுள்ளவர்கள் எவரும் இவ்வாறான தவறான செயற்பாட்டை மேற்கொள்ள மாட்டார்கள்.

கேள்வி : முஸ்லிம் சமூகம் பிரச்சினையொன்றை எதிர்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படலாம் அல்லவா?

பதில் : நாங்கள் இப்போதும் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். இதற்கான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். நேற்று பாராளுமன்றத்திலும் இதுகுறித்துக் கலந்துரையாடினோம். உண்மையில் நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஏனென்றால் ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் சிலர், தாம் அரசாங்கத்துடன் இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் விரைவில் தீர்வு வரும் என்றும் விசேட நிபுணர்குழுவின் அறிக்கை வந்தவுடன் அனைத்தும் சுமுகமாக முடிந்துவிடும் என்றும் கூறினார்கள். எண்ணெய் திரண்டுவரும் போது தாளியை உடைத்துவிடக்கூடாது என்பதற்காக நாங்களும் சற்றுப்பொறுமையாக இருந்தோம். 

ஆனால் இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுப்போம்.

இதுவிடயத்தில் அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதாக இருந்தால், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஏற்கனவே அனுமதியளித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்களின் உள்ளங்களை உடைக்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள். ஒருவரை உயிருடன் எரிப்பதைப் போன்றே நாம் இந்தத் தீர்மானத்தைப் பார்க்கிறோம். 

இலங்கையில் வாழும் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் தற்போது வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களைப் பழிவாங்குவதால் தமது வாக்குவங்கி உயர்ந்துவிடும் என்றே அரசாங்கம் கருதுகின்றது. ஆனால் அரசாங்கம் 20 இலட்சம் முஸ்லிம்களின் உள்ளத்தை மாத்திரமல்ல, இந்த உலகத்தில் வாழும் சுமார் 2 பில்லியன் முஸ்லிம்களின் உள்ளத்தை உடைக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பைச் சம்பாதிக்கிறார்கள். இவையனைத்தும் இந்த நாட்டிற்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி : இதற்கு எதிராக நீங்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றீர்கள்?

பதில் : நாங்கள் நீதிமன்றத்திற்கும் சென்றோம். ஆனால் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இதற்கு சட்டரீதியாகவே நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். எமது நாட்டிற்குள் எவ்வித இன, மதபேதமுமின்றி அனைவரும் இணைந்து இதற்கு எதிராகப் போராடுவோம். பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இரா.சாணக்கியன் உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்குச் சார்பாகக் குரல்கொடுக்கிறார்கள். 

மேலும் பல்வேறு பௌத்த அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தில் நியாயமான தீர்வை வழங்கவேண்டும் வலியுறுத்தி வருகின்றார்கள் என்றார்.