(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களை தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விடயத்தில் அரசாங்கம் வியாபாரம் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் ஒருவர் தனிமைப்படுத்தல் மற்றும் விமான பயணச்சீட்டுக்கான மாத்திரம் இரண்டரை இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை செலவழிக்க நேர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்றத்தில் இன்று 27/2 இன் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்.பி இது குறித்து கூறுகையில்,
வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் இலங்கையர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவது அவசியம் இல்லை என அரசாங்கம் கூறினாலும் அது கட்டாயம் என்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றது. ஏனென்றால் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இட வசதிகள் இல்லை, எனவே விரும்பியோ விரும்பாமலோ அவர்களை ஹோட்டல்களில் தனிமைப்படுத்த வேண்டிய நிர்க்கதிக்கு தள்ளப்படுகின்றனர்.
இதற்கு மாற்றீடாக வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் அனைவரையும் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்த முடியும். ஆனால் வீடுகளில் இவர்களை தனிமைப்படுத்தினால் கொரோனா வியாபாரிகளின் பைகள் நிறையாது, எனவே தான் இந்த மாபியா இடம்பெற்று வருகின்றது. பதிவு செய்ய பணம், பயணச்சீட்டுக்கு பணம் மற்றும் ஹோட்டல்களுக்கு பணம் என ஒரு தொடராக இந்த மாபியா இடம்பெற்று வருகின்றது. அதேபோல் எயார் இலங்காவின் நட்டத்தை சரிசெய்ய வெளிநாட்டில் இருந்து வரும் எமது மக்களை பயன்படுத்த வேண்டாம்.
ஹோட்டலில் ஒரு நாளைக்கு தங்குவதற்கு 12,500 ரூபா ஒரு தனி நபரிடம் அறவிடப்படுகின்றது, 14 நாட்கள் ஒரு நபர் ஹோட்டலில் தங்கியிருக்க 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது, அதுபோக விமான பயணச்சீட்ன் விலை 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது,
பதிவு செய்ய பணம் அறவிடப்படுகின்றது. எனவே ஒரு நபர் இலங்கையில் தனிமைப்படுத்தல் காலத்தில் மாத்திரம் இரண்டரை இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவுசெய்ய செய்யவேண்டியுள்ளது.
அதேபோல் இந்த விடயத்தில் இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம், எதிரியை தனிமைப்படுத்தல், ஒதுக்குதல் என்பது யுத்த தந்திரமாகும். இப்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் கொவிட் நோயாளர்கள் கூட இவர்களுக்கு எதிரிகளாக தென்படலாம். எனவே இராணுவ கண்ணோட்டத்தில் இதனை பார்க்கப்போனால் இவர்கள் எவரையும் இலங்கைக்குள் வரவிடாது தடுத்தாக வேண்டும்.
ஆனால் இதனை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும், வெளிநாடுகளில் இருப்பவர்களும் எமது மக்களே, அவர்கள் எவ்வாறு சென்றனர், என்ன செய்கின்றனர் என்றதையும் தாண்டி அவர்கள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த ராஜித சேனாரத்ன எம்.பி கூறுகையில்,
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை ஹோட்டல்களில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்க வேண்டும் என கூறுகின்றீர்கள், ஆனால் இவ்வாறு வருபவர்கள் வெளிநாட்டவர்கள் அல்ல, எமது நாட்டு மக்கள். அவர்களை சுற்றுலாப்பயணிகள் போன்று கருத வேண்டாம், இவர்களை தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்த முடியும்.
சுற்றுலாப்பயணிகள் சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், அவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவில்லையே. அவர்கள் ஊர் சுற்றுகின்றனர், குடிக்கின்றனர், நடனமாடுகின்றனர், செல்பி எடுக்கின்றனர். அவர்களுக்கு இல்லாத தனிமைப்படுத்தல் எமது மக்களுக்கு எதற்கு, எமது மக்களை வீடுகளில் தனிமைப்படுத்த இடமளியுங்கள். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து எமக்கு பணம் அனுப்புகின்றன்வர்கள். இவர்களை கீழ் மட்டத்தில் நடத்த வேண்டாம்.
2020மார்ச் மாதத்தில் இருந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் இன்று பத்து மாதங்கள் கடந்துள்ளது, இதுவரை காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீளவும் அவர்களின் நாட்டுக்கு கொண்டுவர 7023 விமானங்கள் அனுப்பபட்டுள்ளது, பாகிஸ்தான் 3858 விமானங்களை அனுப்பியுள்ளது, பங்களாதேஷ் 3256 விமானங்களை அனுப்பியுள்ளது, ஆனால் நாம் இதுவரையில் 10 விமானங்களை மாத்திரமே அனுப்பியுள்ளோம்.
ஏன் இவ்வாறான மோசமான நிலையொன்றை அரசாங்கம் கையாள்கின்றது. அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும் எமது மக்களுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் வியாபாரம் செய்ய வேண்டாம் என வலியுறுத்துவதாக அவர் சபையில் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM