144 வருடகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் என்ற பெண் நான்காவது அல்லது ரிசர்வ் நடுவராக பணியாற்றி சாதனை புரிந்துள்ளார்.

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு கிளாரி போலோசாக் என்ற பெண் 4 ஆவது நடுவராக நியமிக்கப்பட்டார். 

இவர் இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு நமீபியா, ஓமன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.சி.சி. யின் 2 ஆம் நிலை ஒரு நாள் போட்டியில் நடுவராக இருந்தார்.

ஐ.சி.சி விதி படி போட்டி நடக்கும் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நடுவராக நியமிக்க அனுமதி உள்ளதால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கிளாரி போலோசாக்வை தேர்வு செய்தது. 

போட்டியில் பந்து மாற்றும்போது அதை கொண்டுவருவது, இடைவேளையின் போது மைதானத்தை ஆய்வு செய்வது, 3 ஆவது நடுவருக்கு மாற்றாக செயல்படுவது 4 ஆவது நடுவரின் பணிகள் ஆகும்.