(எம்.மனோசித்ரா)

இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கான சமவுரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கூறுவதன் மூலம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளமை தெளிவாகிறது.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் வடக்கு , கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். ஜெய்சங்கரின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மௌனம் சாதிப்பத்திலிருந்து இதற்கு தயாராகவுள்ளது என்பது தெளிவாகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் கொவிட் தடுப்பூசி பற்றி பேசிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. அவர் இந்த வருடத்தில் தனது முதலாவது இராஜ தந்திர விஜயத்திற்கு இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளமையை சாதாரண விடயமாகக் கருத முடியாது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களை இந்தியா காலம் காலமாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இவ்வாறான நிலையிலேயே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலும் பரவலாகப் பேசப்படுகிறது. ஏன் இதனை இந்தியாவிற்கு விற்பதில் அரசாங்கம் இவ்வளவு ஆர்வம் செலுத்துகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி , பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை இதன் மூலம் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் இதனைக் கூறும் போது அரசாங்கம் மௌனம் சாதிப்பதன் மூலம் வடக்கு , கிழக்கு மாகாணங்களுக்கு காணி , பொலிஸ் அதிகாரங்களை வழங்க தயாராக உள்ளனர் என்று தோன்றுகிறது.

விமல் வீரவன்சவிற்கும் உதய கம்மன்பிலவிற்கும் இப்போது சந்தோஷமா எனக் கேட்க விரும்புகின்றேன். இந்தியாவில் இரு தேசிய கொவிட் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதனை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராகின்றதா ? இலங்கைக்கு எவ்வகையான தடுப்பூசி கொள்வனவு செய்யப்படவுள்ளது? எந்த முகவர் ஊடாக கொண்டு வரப்படவுள்ளது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்.

சிங்கள பௌத்தர்களை பாதுகாப்பதாகக் கூறிய அரசாங்கத்தில் பௌத்த மதத் தலைவர்கள் நால்வர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அரசாங்கம் பௌத்த மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.

உதயங்க வீரதுங்க உக்ரைனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருகிறார். அந்த நாடு இலங்கையை விட வறுமையானதாகும். அத்தோடு அங்கு புதிய வைரஸ் வகைகள் 4 பரவுகின்றதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளமையால் உள்நாட்டு சுற்றுலாத்துறை ஊழியர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை எதனையும் பின்பற்றாமல் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

ஏன் உக்ரைனிலிருந்து மாத்திரம் அழைத்து வரப்படுகிறார்கள் ? இவர்களை விட அதிகளவில் செலவுகளை மேற்கொள்ளக் கூடிய நாட்டவர்களை ஏன் அழைத்து வர முடியாது ? என்றார்.