தோட்ட வைத்தியசாலைகளை சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை - சபையில்  பவித்ரா 

By T Yuwaraj

07 Jan, 2021 | 08:28 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக  சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி சபையில் தெரிவித்தார்.

அதேபோன்று பெருந்தோட்டப்பகுதிகளில் சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷால் கேள்வி ஒன்றை எழுப்பி, பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகளில் எம்.பி.பி.எஸ். படித்த வைத்தியர்கள் எவரும் இல்லை. 

இங்கு ஈ.எம்.ஓ எனப்படும் தோட்ட நிர்வாகங்களால் நியமிக்கப்படுபவர்களே வைத்தியர்களாக இருக்கின்றனர். இதனால் பெருந்தோட்ட மக்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. மடுல்சீமையில் கடந்த ஆண்டு பஸ் விபத்தொன்று ஏற்பட்டது. தற்போது ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. 

அத்தருணத்தில் தோட்ட வைத்தியசாலையில் எம்.பி.பி.எஸ் படித்த வைத்தியர்கள் இருந்திருந்தால் விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

ஆகவே, இரண்டு எம்.பி.பி.எஸ் வைத்தியர்களையாவது ஒரு தோட்ட வைத்தியசாலைக்கு நியமிக்க வேண்டும். அம்புலன்ஸ்களும் தோட்டங்களில் இல்லை என்றார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி கூட்டங்களிலும் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி கூட்டத்தில் கலந்துரையாடி அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் தேசிய சுகாதார கட்டமைப்பில் இணைப்பதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல செய்யப்படும். 

அதனைத் தொடர்ந்து அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசாங்கத்திற்கு சுவீகரிக்கப்படும்.  அதேபோன்று பெருந்தோட்டப்பகுதிகளில் சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

வைத்தியசாலையொன்றுக்கு இரு வைத்தியர்கள் வீதம் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வைத்தியர்களை உருவாக்க ஐந்து வருடங்களாகும். படிப்படியாக நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right