அமெரிக்காவின் ஹவுஸ் ஜுடிசரி கமிட்டியில் (நீதிச்சேவை குழு) உள்ள ஜனநாயகக் கட்சியினர் புதன்கிழமை மாலை துணை ஜனாதிபதி பென்ஸுக்கு 25 ஆவது திருத்தத்தை முன்வைத்து ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பை பதவியில் இருந்து நீக்குமாறு வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்றும் பதவிக்கு தகுதியற்றவர் என்றும் அறிவித்த ஹவுஸ் ஜுடிசரி கமிட்டியின் ஜனநாயகக் கட்சியினர், 25 ஆவது திருத்தத்தை செயற்படுத்தி, ட்ரம்பை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றுமாறும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை வலுக்கட்டாயமாக முறியடிக்க வன்முறை மற்றும் சமூக அமைதியின்மையைத் தூண்டுவதற்கான ஜனாதிபதி ட்ரம்ப்பின் விருப்பம் இந்த நடவடிக்கையின் மூலம் தெளிவாக புலப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25 ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.

1967 ஆம் ஆண்டு இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து ஒரு தடவையேனும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை.