ஜோ பைடனின் வெற்றிக்கு காங்கிரஸ் சான்றளிப்பதை தடுக்கும் நோக்கில் அமெரிக்க காங்கிரஸ் அமைந்திருக்கும் கபிட்டல் கில் வளாகத்தில் புதன்கிழமை மாலை ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் முன்னெடுத்த வன்முறைச் சம்பவங்களினால் நால்வர் உயிரிழந்ததுடன், 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 52 பேரில் 47 பேர் வொஷிங்டன் மேயர் முரியல் பவுசர் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் உரிமம் பெறாத ஆயுதங்களை வைத்திருந்தமை மற்றும் வன்முறைச் சம்பவங்களை முன்னெடுத்தமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் குடியரசு மற்றும் ஜனநாயக தேசியக் குழுக்களின் தலைமையகத்திலிருந்து இரண்டு குழாய் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்க காங்கிரஸ் அமைந்திருக்கும் கபிட்டல் கில் வளாகத்திலிருந்த வாகனமொன்றிலிருந்து பெற்றோல் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.