இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 219ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக பதிவாகிய இரு கொரோனா மரணங்களும் தெஹிவளை மற்றும் அலவ்வ பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவரும் அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் சில பிரதேசங்கள் இன்று புதன்கிழமை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை , மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

அதற்கமைய பூஜாபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுணுகம திவணவத்தை கிராம சேவகர் பிரிவு மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவில் மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன இன்று புதன்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14 , 8/1, 8/3 மற்றும் 9 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் , நகர வலய கிராம சேவகர் பிரிவு, பாலமுனை 1 கிராம சேவகர் பிரிவு , ஒலுவில் 2 கிராம சேவகர் பிரிவு, அட்டாளைச்சேனை 8 கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு, ருவன்வெல்ல, ஆகிய பொலிஸ் பிரிவுகள் மற்றும் கருவாத்தோட்டத்தின் 60 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இதேவேளை இன்று புதன்கிழமை இரவு வரை 521 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 46,247 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 39 023 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 6738 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்