(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த புகையிரத பொதி விநியோக சேவை இன்றுமுதல் முன்னெடுக்கப்படும்.ரயில் பயணசீட்டை பெற்று பயணம் செய்ய முடியாமல் போன பயணிகளுக்கு  பற்றுச்சீட்டுக்கான பணம் நாளை முதல் வழங்கப்படும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பலமாத காலமாக ரயில் போக்குவரத்து சேவையில் முன்னெடுக்கப்பட்ட பொதி விநியோக சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது ரயில் சேவையில் உள்ள பிரதேசங்களில் சுகாதார பாதுகாப்பு  முறைமைகளுக்கு அமைய நாளை முதல் பொதி விநியோக சேவை கடுகதி ரயில் ஊடாக ஆரம்பிக்கப்படும்.

பழுதடையும் பொருட்கள் உள்ளடங்கிய பொதிகளை ரயில் நிலையத்திற்கு கொண்டு வருவதை பயணிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பொருப்பாக்கப்படும் அனைத்து பொதிகளும் ரயில் நிலையத்தில் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும்.

கடந்த காலங்களில் ரயில் சேவையை பயன்படுத்த பயண சீட்டை முன்பதிவு செய்தவர்கள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பயணங்களில் ஈடுப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பயணச்சீட்டுக்கான பணத்தை இன்று முதல் வழங்க தீர்மானிக்கபபட்டுள்ளது. 

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கொழும்பு- பொல்காவெல,கொழும்பு-குருநாகலை, கொழும்பு - மாத்தறை,மற்றும் மருதானை-களுத்துறை தெற்கு,கொழும்பு- புத்தளம் ஆகிய பகுதிகளில் ரயில் சேவை பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. நாளை முதல் இப்பகுதிகளுக்கான ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும் என்றார்.