(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேசத்தை வெற்றிகொள்ளக்ககூடிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதாக இருந்தால், முழு பாராளுமன்ற பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு அதனை மேற்கொள்ளவேண்டும்.

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாட்டில் அரசியலமைப்பு இல்லாமையே சர்வதேச பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் காரணமாகும் என எதிர்க்கட்சி பிரதமகொறட லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசியலமைப்பு உருவாக்கத்தை சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கிறது - லக்ஷ்மன்  கிரியெல்ல | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. ஆனால் இந்த அரசியலமைப்பு தயாரிப்பு பணியில் அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்களை மாத்திரமே ஒன்றிணைத்து கொண்டிருக்கின்றது.

அவ்வாறு அமைக்கப்படும் அரசியலமைப்பு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியுமாக இருக்குமா என கேட்கின்றேன்.

1947 சோல்பரி சாமி எமது நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை தயாரிக்க வந்தபோது, அனைத்து கட்சிகள் மற்றும் இன மக்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் 29ஆவது சரத்தை முன்னிலைப்படுத்தினார். அவ்வாறுதான் சுதந்திரமான யாப்பு அமைக்கப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாங்கள் இரண்டுவிடுத்தம் அரசியலமைப்பை தயாரித்தோம். பண்டார நாயக்க அம்மையாரின் குடியரசு யாப்பு மற்றும் ஜேஆரின் ஜனாதிபதி முறை அரசியலமைப்பு.

இந்த இரண்டு அரசியலமைப்பு தயாரிப்பின்போதும் சிறுபான்மை கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக தமிழ் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. அதனால்தான் இந்த இரண்டு யாப்புகளுக்கும் விமர்சனங்கள் வந்தன.

அதனால் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அரசியலமைப்பை தயாரிப்பதாக இருந்தால், அனைத்து இன மக்களும் பிரதிநிதித்துவப்படும் வகையில் குழுவொன்றை அமைத்து அரசியலமைப்பை தயாரிக்கவேண்டும். 

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக நாங்கள் ஏற்படுத்தினோம்.

பாராளுமன்றத்தினால் 20 குழுக்களை அமைத்தோம். அந்த 20 குழுக்களாலும் 20அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தோம். அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தோம். 

பாராளுமன்றத்தில் 90வீதமானவர்கள் அதற்கு ஆதரவாக இருந்தனர். புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு முடியும் தறுவாயிலே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

மேலும் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே அரசியலமைப்பு தயாரிக்கப்படவேண்டும். அவ்வாறான அரசியலமைப்பு நாட்டில் ஏற்படுத்தப்படாததாலே சர்வதேச பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாகும். அதனை நாங்கள விளங்கிக்கொள்ளவேண்டும். 

அவ்வாறு இல்லாமல் தங்களுக்கு நெருக்கமான சட்டத்தரணிகளை மாத்திரம் இணைத்துக்கொண்டு அரசியலமைப்பு தயாரித்தால், முன்னர் இருந்த அரசியலமைப்புகளுக்கு ஏற்பட்ட நிலையே இதற்கும் ஏற்படும்.

அதனால் சர்வதேசத்தை வெற்றிகொள்ளக்ககூடிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதாக இருந்தால், முழு பாராளுமன்ற பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு அதனை மேற்கொள்ளவேண்டும் என்றார்.