தமிழ் மக்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி, அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கடப்பாட்டையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் கொழும்பை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் இணைந்து இன்றைய தினம் அமைச்சில் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.


இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன,

சுமார்  2,600 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று தடவைகள் கௌதம புத்தரின் வருகையின் ஊடாக இலங்கை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. சுமார்  2,300 வருடங்களுக்கு முன்னர் பாரத தேசத்தை ஆண்ட அசோக சக்கரவர்த்தியின் புதல்வரான மகிந்த தேரர் மற்றும் புதல்வி சங்கமித்தை ஆகியோரின் வருகையைத் தொடர்ந்து இலங்கையில் புத்தசாசனம் அறிமுகமானது.

இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மிகநெருங்கி நீண்டகாலத்தொடர்ப்பு இருந்துவரும் அதேவேளை, இரண்டும் பாராளுமன்ற ஜனநாயகத்தை நடைமுறையில் கொண்ட நாடுகளாகும்.

நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரினதும் நலன்களையும் தேவைகளையும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதி பூண்டிருக்கிறார். பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, மீன்பிடி, கலாசாரம் மற்றும் குறிப்பாக தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி ஆகிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டது.

அதேபோன்று இந்த நெருக்கடியின் போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு எமது நன்றியை வெளிப்படுத்தினோம். இந்தியாவின் 'அயலகத்திற்கு முதலிடம்" கொள்கை மிகவும் நெருக்கடி வாய்ந்த அண்மைக்காலத்தில் நேர்மறையான விதத்தில் பிரயோகிக்கப்பட்டது என்றார்.

அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,

இந்தியாவின் மிகநெருங்கிய பங்காளரான கொழும்பிற்கான விஜயத்துடன் 2021 ஆம் ஆண்டை ஆரம்பிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கொரோனா வைரஸ் பரவலால் இரு நாடுகளும் ஒரேவிதமான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலேயே நான் இங்கு வருகைதந்திருக்கிறேன். எனினும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் ஒருமித்து செயலாற்றக்கூடிய வாய்ப்பையும் அது ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது கொவிட் - 19 பரவலின் பின்னரான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தியாவிடமிருந்து தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வது குறித்தும் ஆராய்ந்தோம்.

பரஸ்பர நம்பிக்கை, கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையுடனான நல்லுறவை மென்மேலும் வலுப்படுத்திக்கொள்வதில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வருவதுடன் இது இலங்கையின் மீது நேர்மறையான நன்மைகளையே ஏற்படுத்தும். பெரும்பாலான இந்திய வணிகங்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காண்பித்து வருகின்றன.

மேலும் இலங்கையின் நீண்டகால நல்லிணக்க செயற்பாடுகளையும் இனங்களுக்கு இடையிலான அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் கொள்கையையும் இந்தியா ஊக்குவிப்பதுடன் அவற்றை அடைந்துகொள்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கும். அதுமாத்திரமன்றி ஒருமித்த நாட்டிற்குள் தமிழ்மக்களின் அபிலாசைகளாக நீதி, அமைதி, சமத்துவம், கௌரவம் ஆகியவை உறுதி செய்யப்பட்ட வேண்டும். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கத்தை வழங்குவதற்கான அரசாங்கத்தின் கடப்பாடுகளும் இதற்குள் உள்ளடங்குகின்றன என்றார்.

இன்றைய தினம் காலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், மாலை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அதுமாத்திரமன்றி ஏனைய அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.