பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 176 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளதுடன், ஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசையில் முதலாம் இடத்தை பிடித்துள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் நியூஸிலாந்து அணி முதல் இடத்தை பிடித்துள்ளமை வரலாற்றில் இது முதல் தடவையாகும்.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது நியூஸிலாந்து அணியுடன் இருபதுக்கு : 20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது.

முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரை நியூஸிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின்னர் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 101 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 659 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்தியது.

இந்த இன்னிங்ஸில் டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் நான்காவது இரட்டை சதத்தை அடித்தார். இதன் மூலம் டெஸ்டில் அதிக இரட்டை சதம் (4) அடித்த நியூசிலாந்துக்காரர் என்ற பெருமையை பிரன்டன் மெக்கல்லத்துடன் இணைந்து பெற்றார்.

நியூஸிலாந்து அணி சார்பில் கேன் வில்லியம்சன்  28 பவுண்டரிகள் அடங்கலாக 238 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கோல்ஸ் 18 பவுண்டரிகள், ஒருசிக்ஸர் அடங்கலாக 157 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

நியூஸிலாந்து அணியின் இந்த இன்னிங்ஸில் 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இணைப்பாட்டமாக 369 ஓட்டங்களை பெற்றனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் 3 ஆவது பெரிய இணைப்பாட்டம் இதுவாகும்.

அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி வீரர்கள் நியூஸிலாந்து அணியினரின் பந்து வீச்சுகளுக்க தாக்குப் பிடிக்க முடியாது 81.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 186 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

இதனால் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 176 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணி சார்பில் அஸர் அலி 93 ஓட்டங்களையும், மெஹமட் ரிஸ்வான் 61 ஓட்டங்களையும், ஃபஹீம் அஷ்ரப் 48 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டத்துடனும் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டுகளையும், டிம் சவுதி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நியூஸிலாந்து அணியின் இந்த வெற்றியின் மூலம் 118 புள்ளிகளுடன் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்‍தை பிடித்துள்ளது, பட்டியலில் 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், 114 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இதேவேளை அண்மைய வெற்றிகள் நியூஸிலாந்து அணியை ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலைக்கு தரம் உயர்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.