(ப.பன்னீர்செல்வம்)

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். 

இப் பிரச்சினைகள் தொடர்பில் இம் மாத இறுதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கடற்தொழில், நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார். 

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் சட்டவிரோத போராட்டம் ரோலிங் முறையினை பயன்படுத்துகின்றனர். இதனால் எமது கடற்பரப்பில் மீன்வளம் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் அழிகிறது. 

எனவே இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் வடமாகாண மீனவர்கள் உட்பட மீனவப் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவ் விடயம் தொடர்பாகவும் இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்தது. 

இப் பேச்சுவார்த்தைகள் இம் மாத இறுதியில் இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் மற்றும் வடமாகாண மீன்வளத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவுகள் உட்பட அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் கடந்த புதன்கிழமை அமைச்சில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.