(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டம் அமைத்து சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதை நிறுத்த முடியாது. மாறாக குடும்பங்களின் வறுமையை இல்லாமலாக்க பொருளாதார வேலைத்திட்டம் அமைக்கப்படவேண்டும். அத்துடன் உக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகளை கொண்டுவந்து அரசாங்கம் நாட்டை அழித்துவிடக்கூடாது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  தொழில் அமைச்சின் கீழ் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தீவிரம் காரணமாக உக்ரைன் நாட்டை முற்றாக மூடிவிடவேண்டும் என அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருக்கும் நிலையில் உதயங்கவின் தேவைக்காக அந்த நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர்.

எமது நாட்டுக்கு கொவிட் இரண்டாம் அலை வந்தது உக்ரைன் பிரஜையினால் என சுதர்ஷனி பெர்ணாந்து பிள்ளை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அப்படியாயின் அரசாங்கம் உக்ரைன் சுற்றுலா பயணிகளை கொண்டுவந்து நாட்டை அழித்துவிடவா முயற்சிக்கின்றது என கேட்கின்றேன் என்றார்.