(நா.தனுஜா)

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களை நியமித்ததன் ஊடாக அங்கு காணப்பட்ட ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து, நட்டத்தில் இயங்கிய அதிகாரசபையை மீண்டும் இலாபம் உழைக்கும் கட்டமைப்பாக மாற்றினோம்.

அவ்வாறு மாற்றியமைத்தாகப் பழிவாங்குவதாயின் என்னை மாத்திரம் இலக்குவையுங்கள். மாறாக திறமையான அரச உத்தியோகத்தர்களைப் பழிவாங்கவேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த காலத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் விற்பனை செய்யப்பட்ட இடங்களுக்கான நிதியை மீள வசூலித்துக்கொண்டதுடன் ஊழல்மோசடிக்காரர்களிடமிருந்து நகர அபிவிருத்தி அதிகாரசபையை விடுவித்து, அங்கு பணியாற்றிய சுமார் 40,000 ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முற்கொடுப்பனவை வழங்கக்கூடியவாறு அதிகாரசபையின் நிதிக்கட்டமைப்பை வலுப்படுத்திய அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தின் தூண்டுதலின் விளைவாக இரகசியப்பொலிஸாரால் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

நட்டத்தை அனுபவித்துக்கொண்டிருந்த நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களை நியமித்ததன் ஊடாக அங்கு காணப்பட்ட ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து, மீண்டும் அதனை இலாபம் உழைக்கும்

கட்டமைப்பாக மாற்றினோம். அவ்வாறு மாற்றியமைத்தாகப் பழிவாங்குவதாயின் என்னை மாத்திரம் இலக்குவையுங்கள். மாறாக திறமையான அரச உத்தியோகத்தர்களைப் பழிவாங்கவேண்டாம்.

அதேபோன்று நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வெளியிட்ட 29 நகர அதிகாரப்பகுதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் இரத்துச்செய்யப்பட்டிருப்பதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுமாத்திரமன்றி இவ்வாறு இரத்துச்செய்யப்பட்டதன் மூலம் எமது நாட்டின் இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முயற்சி தோற்கடிக்கப்பட்டிருப்பதாக இதுகுறித்து எதுவுமறியாத ஒருவர் கூறியிருந்தார். 

அது முற்றிலும் பொய்யானதாகும். மாநகரப்பகுதியில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் நோக்கிலேயே மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நகர அபிவிருத்தி என்பது முறையான விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை சூழலுக்கு நேயமற்ற முறையிலும் பொது வசதிகள் மேம்படாத வகையிலும் தன்னிச்சையாக மேற்கொள்வதற்கு முற்படும் பட்சத்தில், தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முற்பட்டு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை விடவும் பாரிய குழப்பமே ஏற்படும் என்றார்.