அவுஸ்திரேலிய ஓபன் அமைப்பாளர்கள் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக சர்வதேச வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் தங்குமிட திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மெல்போர்னின் கொலின் வீதியில் அமைந்துள்ள வெஸ்டின் மெல்போர்ன் என்ற ஒரு அடுக்குமாடி சொகுசு ஹோட்டலில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களை தங்க வைப்பதற்கான தீர்மானங்கள் முன்னதாக எட்டப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த ஹோட்டலின் குடியிருப்பாளர்களிடமிருந்து எழுந்த சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலிய ஓபன் அமைப்பாளர்களுக்கு இந்த இக் கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 8-21 வரை நடைபெறவுள்ள கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்னதாக வெஸ்டின் மெல்போர்ன் ஹோட்டலில் வீரர்களை 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கமும், டென்னிஸ் அதிகாரிகளும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்காக அவுஸ்திரேலிய வரும் வீரர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட தளமாக செயல்படும் நான்கு ஹோட்டல்களில் வெஸ்டின் மெல்போர்னும் ஒன்றாகும்.

வெஸ்டின் மெல்போர்ன் ஹோட்டலின் அடுக்குமாடி குடியிருப்பில் நிரந்தரமாக வசிக்கும் 32 பேர், கட்டிடம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தளமாக இருப்பதற்கான முடிவைப் பற்றி முறையாக ஆலோசிக்கப்படவில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான டென்னிஸ் வீரர்கள் வருவதால் எங்களது உடல்நிலை ஆபத்துக்கு உள்ளாகும் என்றும் சுட்டிக்காட்டினர்

அத்துடன் இந்த நடவடிக்கைக்கு எதிராக தடை உத்தரவு கோருவதாக புகார் எழுந்ததையடுத்து வீரர்களை வெஸ்டின் மெல்போர்ன் ஹோட்டலில் தனிமைப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக சர்வதேச வீரர்கள் ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து மெல்போர்னுக்கு வருகை தரவுள்ளனர்.

எவ்வாறெனினும், வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக மாற்று ஹோட்டல் கிடைத்துள்ளதாக விக்டோரியா மாநில காவல்துறை அமைச்சர் லிசா நெவில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் சந்திப்பில் தெரிவித்தார்.