(நேர்காணல்:- ஆர்.ராம்)
நீண்டகாலமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் விடுதலை சாத்தியமாக அமையவேண்டுமானால் அரசியல் ரீதியான தீர்மானமே எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். 

1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதன் கீழ் அப்போதைய சட்டமா அதிபரினால் குட்டிமணி, தங்கத்துரை, தேவன் ஆகிய அரசியல் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கான நீர்வேலி வங்கிக் கொள்ளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சிவநேசன் வழக்கிலிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு வரை 40 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தினை கையாண்டு வரும் இவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு, 

கேள்வி:- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அண்மைய நாட்களில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்றதே?

பதில்:- தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் தேர்தல்கள் காலங்களின் போது தேசிய கட்சிகள் வாக்குறுதிகளை வழங்குவதும், பதவிக்கு வந்த பின்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் கிடப்பில் போடுவதும் வழமையான செயல்பாடுகளே. 

ஆனால் மஹர சிறைச்சாலையில் நிகழ்ந்த அனர்த்தங்களினாலும் சிறைச்சாலைக்குள் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ், காரணமாகவும்  நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து சிறைக் கைதிகள் 7,479 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவர்களில் 6,915 சந்தேக நபர்கள் உள்ளடங்குவதாகவும் ஏனையோர் சிறைத் தண்டணை பெற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இடநெருக்கடியை குறைக்கும் நோக்கில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டணைச் சட்டக் கோவையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்களில் குறுகியகால தண்டணை வழங்கப்பட்ட கைதிகளும் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்ட கைதிகளுமே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் ஒரு தமிழ் அரசியல் கைதிகூட விடுவிக்கப்படவில்லை. ஆகக்குறைந்தது பிணை கூட வழங்கப்படவில்லை. ஆகவே தான் அவர்களின் விடுதலைக்கான கோரிக்கைகள் பல தளங்களில் பிரதிபலிக்கப்படுகின்றது.

கேள்வி:- கடுமையா மற்றும் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பட்டிலொன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே

பதில்:- தண்டணைச் சட்டக் கோவையின் கீழ் கொடூரமான திட்டமிட்ட குற்றச்செயல்களாக கருதப்படும் கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டவர்கள் உட்பட நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிக்கின்ற கைதிகளின் நன்னடத்தையை மையப்படுத்தியே நூறு கைதிகளுக்கு பொதுமன்னிப்பளிப்பதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் சிலருக்கு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக 10 வருடத்திலிருந்து 600 வருடங்கள் வரை தண்டணை விதிக்கப்பட்ட கைதிகள் உட்பட ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட கைதிகள் 12பேர் உள்ளனர். 

பொது மன்னிப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நூறு கைதிகளில் தமிழ் அரசியல் கைதிகள் உள்வாங்கப்படாமல் தவிர்க்கப்படுவதற்காகவே ‘திட்டமிட்ட மற்றும் கொடூர குற்றங்களில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட கைதிகள்’ என்ற வரையறை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுச் சட்டத்தின் கீழ் தண்டணை அனுபவிக்கும் சிங்கள கைதிகள் விடுதலையாகுவதற்கு மட்டுமே வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்விதமான அக்கறையும் கொள்ளப்படவில்லை. 


கேள்வி:- இலங்கையில் அரசியல் கைதிகள் யாருமே இல்லையென அரசாங்கத்தின் முக்கிஸ்தர்கள் தொடர்ச்சியாக கூறுகின்றார்களே?

பதில்:- தமிழ் அரசியல் கைதிகள் யாரும் இல்லையென்று ஊடகப்பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பிலவும் வேறு சிலரும்  கூறியுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே சிறையில் உள்ளனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களும் இதேகருத்தையே வெளிப்படுத்தினர். இந்த நாட்டில் அரசியல் ரீதியாக பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் இனத்தின் விடுதலைக்கான பயணத்தில் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படுள்ளார்கள். அவ்விதமாக கைது செய்யப்பட்டவர்களிள் அனைவருமே அரசியல் காரணங்களுக்காகவே கைதுகள் நிகழ்ந்துள்ளன. அந்த அடிப்படையில் அவர்கள் அரசியல் கைதிகளே. இதுவே யதார்த்தம். 

மேலும் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய மக்கள் விடுதலை முன்னணியினர் கைது செய்யப்பட்டபோது அவர்களை அரசியல் கைதிகளாக ஏற்றுக்கொண்டவர்கள், இனவிடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்களை மாத்திரம் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவது ஏன்?

கேள்வி:- தற்போதைய சூழலில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்காக எவ்வாறான சாத்தியமான பொறிமுறைமைகளைக் கையாள முடியும்?

பதில்:- தமிழ் அரசியல் கைதிகளுக்கு தொடர்பில் பொது மன்னிப்பை கோர வேண்டுமா? அல்லது பொது மன்னிப்பிற்கு மாற்றாக ஏதேனும் மாற்றீடுகள் உள்ளனவா மாற்றிடுகளின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை தலையை வலியுறுத்த முடியும்.  முதலாவதாக, 1996 முதல் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்தும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சுய அரசியல் இலாபத்திற்கு அப்பால் தமிழ் சமூகம் சார்பாக ஒன்றிணைந்த வேண்டுகோளை முன்வைக்கும் போது நிறைவேற்று அதிகாரங்களை தன்னகத்தே கொண்டுள்ள ராஜபக்ஷ அரசாங்கம், 1977, 1987 களில் ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததைப்போன்று பொது மன்னிப்பில் விடுதலை செய்யலாம்.

அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை மூன்று விதமாக பிரித்துப் பார்க்க வேண்டும். தண்டணை வழங்கப்பட்ட அரசியல் கைதிகள்,  மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றக் கொண்டிருக்கும் கைதிகள், விசாரணைக்காக விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் என்பன அந்த மூன்று வகையாகின்றன.

மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவடைந்து தண்டணை அனுபவிப்பவர்கள் 45 பேராவர். இவர்களில் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் உயர்நீதிமன்றிலும் மேன்முறையீடு செய்த 30 கைதிகளின் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளன. மிகுதி 15பேரினதும் மேன்முறையீடுகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தண்டணை வழங்கப்பட்ட கைதிகளைகளையும் தண்டணையின் பின்னர் மேன்முறையீடுகளை தாக்கல் செய்த கைதிகளையும்  விடுதலை செய்வதானால் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தினால்  முடியும். அதாவது,  அரசியலமைப்பின் பிரகாரம்  பொது மன்னிப்பு வழங்;கி விடுதலை செய்யலாம். 

அடுத்து, நாட்டிலுள்ள மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 33 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாயின் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறும் வழக்குகளின் குற்றச்சாட்டுப்பத்திரங்கள் சட்டமா அதிபரினால் மீளப்பெறப்படும் பொழுது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படலாம்

மேலும், 2009ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப் புலிகள் மீள்உருவாக்கம் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தமை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினை கொலை செய்ய சதிசெய்தாக மற்றுத்திறனாளிகளான முன்னாள் போராளிகள் உட்பட 16 தமிழ் அரசியல் கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தினை கொலை செய்ய சதிசெய்தாக இவ்வருடம் கைது செய்யப்பட்ட மற்றுத்திறனாளிகளான முன்னாள் போராளிகள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸார் நீதிமன்றிற்கு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர் 

அரசியல் கைதிகளின் விடுதலையில் மேற்கூறப்பட்ட இப்பொறிமுறைகள் காணப்பட்டாலும் சகல அரசியல் கைதிகளினதும் விடுதலையாவதானால் அரசியல் தீர்மானமே அவசியமாகின்றது. அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவிடத்து சகல கைதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டோ அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்டோ விடுதலை செய்யவும் முடியும்.

கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்களின் போக்குகளின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் சாத்தியம் உள்ளதா?

பதில்:- இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பபட்டிருப்பவர்களுக்கு எதிராக தேவையற்ற காலதாமதம் செய்யாமல் முறையாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் குற்றவாளியாகக் காணப்பட்டு  தீர்ப்பில் அதி உச்ச தண்டணை வழங்கப்பட்டிருந்தால் கூட பல ஆண்டுகளுக்கு முன்னனே அவர்களின் தண்டணை காலம் முடிவுற்று விடுதலை ஆகியிருப்பர். தற்போது அதுபற்றிய பேச்சுவார்த்தைகளும்; அவசியமற்றதாயிருக்கும்.

ஆனால், அவர்கள் விடயத்தில் வேண்டுமென்றே நீண்ட காலதாமதம் காட்டப்படுகின்றது. இதற்கு அரசியல் தலைமைத்துவங்களின் இலக்கு வைக்கப்பட்ட நோக்கங்களா அல்லது இக்கைதிகள் தமிழர்கள் என்ற இன ரீதியான பாகுபாடா காரணமாகின்றது என்ற நியாயமான கேள்விகள் எழுகின்றது. 

மேலும், இவ்வாறு நீண்டகாலமாக சிறைகளில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு தொடர்தேச்சியான அரசியல் அழுத்தம் அவசியமாகின்றது. அதன் ஊடாகவே ஆட்சியாளர்களின் நிலைப்பாடுகளை மாற்றி அமைக்க முடியும். 

கேள்வி:- 2015ஆம் ஆண்டு நாட்டின் சிறைச்சாலைகளில் 217 தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றில்  நல்லாட்சி அரசினால் பல  அரசியல் கைதிகள் குறித்தவொரு பொறிமுறை மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றதே? 

பதில்:- பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதிகூட 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசினால் விடுதலை செய்யப்படவில்லை. ஜனாதிபதியும், சில அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் இலபங்களுக்கான பிம்பங்களை ஏற்படுத்தினர்.

உண்மையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களும் வழக்குத் தொடுக்க எந்த வித சான்றுகளும் இல்லாதவர்களும் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர். இந்தக் கைதிகளில் சிலருக்கு பிணை வழங்கப்பட்டது. சில கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது 2016ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட பல கைதிகள் இன்றும் நீதிமன்றம் வந்து செல்கின்றனர்;

கேள்வி:- தமிழ் அரசியல் தரப்புக்கு இசைவான அரசாங்கம் ஆட்சியிலிருந்தும் இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது போனமைக்கு என்ன காரணம்?

பதில்:- தமிழ் அரசியல் கைதிகளாக உள்ளவர்களில் பலருக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழே கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள. 

இந்த வழக்குகளில் கைதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வழங்கப்பட்ட தண்டணை பற்றிய விடயங்களின் உள்ளடக்கம் பற்றிய போதிய தெளிவும் அறிவுமின்றி பேச்சு வார்த்தைகளில் தமிழ்த் தரப்பு கலந்து கொண்டமையினால் தான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கேள்விக்குறியானது. 

பேச்சு வார்த்தையில் முறையான சரியான பொறிமுறைகளை பின்பற்றப்படாவிடின் விதிவிலக்காக பேச்சுவார்த்தை நடாத்தப்படும். அவ்வாறான பொழுது  மேற்கூறப்பட்டுள்ள பொறிமுறைகளை சரியான முறையில் முன்வைத்து கையாளவில்லை.

இதனால் 2015இல் தமிழ் அரசியல் சர்ப்பு அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகாது போனது. 

கேள்வி:- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையானுக்கு) பிணை வழங்கப்பட்டுள்ளதே? 

பதில்:- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஜந்து கைதிகளுக்கு  எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச் சாட்டுப்பத்திரத்தில்  எதிரிகளுக்கு எதிராக  முக்கிய சான்றாக சட்டமா அதிபரினால் முன் வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாகும். அது கைதியினால் சுயமாக வழங்கப்பட்ட வாக்கு  மூலம் அல்ல என்று மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து 2020ஆம்ஆண்டு கார்த்திகை மாதம் 24ஆம் திகதி ஜந்து கைதிகளுக்கும் பிணை வழங்கும்படி எதிரிகள் தரப்பு  சட்டத்தரணிகள் பிணை கோரியபோது அரச சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜந்து கைதிகளையும் மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது

2009ஆம் ஆண்டு கைது பாகிஸ்தான் தூதுவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் மகன் ஆதித்தியன் மற்றம் காலி கடற்படைத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட விமான குண்டுத் தாக்குதலில் காலை இழந்த கைதியான கந்தையா இளங்கோ ஆகிய இருவருடைய குற்ற ஒப்பதல் வாக்கு மூலங்களும் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் ‘உண்மை விளம்பல்’ விசாரணயில் கொழும்பு காலி மேல் நீதிமன்றங்களினால் நிராகரிக்கப்பட்டது. 

இதனையடுத்து, இரண்டு அரசியல் கைதிகளையும் பிணையில் விடுதலை செய்ய நான் நீதிமன்றில்  விண்ணப்பித்தபோது சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவித்ததால் நான் முன்வைத்த எனது வேண்டுகோளை சட்டமா அதிபரின் சம்மதம் இன்றி பிணை வழங்க முடியாத நிலையில் நீதிமன்றம்  நிராகரித்தது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்றார். ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்ற ஒப்பதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு  பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். 

பயங்காரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் ஜந்து வருடங்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட மற்றைய தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு மூன்று சகாப்தங்களாக சிறையிலேயே வாழ்வைக் கழிக்கின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.