- சதீஷ் கிருஷ்ணபிள்ளை -

காலச் சக்கரம் சுழல்கிறது. ஒரு சுழற்சி முடிந்து மற்றைய சுழற்சியின் தொடக்கப்புள்ளியில் நிற்கிறோம். 

கடந்த சுழற்சி வேதனை தந்தது. மனிதகுலமும், பொருளாதாரமும் ஸ்தம்பித்து நின்றன. ஒரு நச்சுயிரியின் பரவலால் உயிர்களை இழந்தோம். உலக பொருளாதாரம் கடந்த 75 வருட கால வரலாற்றில் என்றுமில்லாத மிக மோசமான பொருளாதார மந்தநிலையை சந்தித்தது. கோடிக்கணக்கான மக்கள் வருமானத்தை இழந்தார்கள். மக்களின் வாழ்க்கை முறை மாறியது. முடக்கம் யதார்த்தமாகியது. இயல்புநிலைக்கு புது அர்த்தம்.

காலம் புதிரானது. கடந்ததில் இருந்து கற்றுக்கொள்ளலாம். கற்றதில் இருந்து அடுத்து வருவதை ஊகிக்கலாம். எத்தனையோ சிகரங்களைத் தொட்டாலும், இது தான் நடக்கும் என்பதை நிச்சயித்துக் கூறும் ஆற்றல் மனிதகுலத்திற்கு கிடையாது. இதற்கு 2021ஆம் ஆண்டும் விதிவிலக்கு அல்ல. இருந்தாலும், இவ்வருடத்தின் ஆரம்பத்தில் நின்று கொண்டு, இது எப்படியிருக்கும் என்பதை எதிர்வுகூருவதில் ஓர் ஆனந்தம். 

கொரோனா பெருந்தொற்று. இது ‘சர்வதேச கரிசனைக்குரிய பொதுச்சுகாதார நெருக்கடி’ என உலக சுகாதார ஸ்தாபனம் வர்ணித்தது. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா? 

இவ்வாண்டுக்குள் சாத்தியப்பட்டால், அது சாதனையே. இதற்கு விஞ்ஞானமும், மருத்துவமும், அரசியலும் ஒருங்கிணைய வேண்டும். பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம். தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளி பேணப் பழகியிருக்கிறோம். தேவையானவர்களுக்கு மருந்து கிடைக்கும் வரை, எல்லாமும் தொடர வேண்டும். 

மருந்து கிடைக்குமா? அது அரசியல். அத்துடன் செல்வத்துடனும் சம்பந்தப்பட்டது. உள்ள நாடுகள் பெறலாம். இல்லாத நாடுகள் தத்தளிக்கலாம். இந்த இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகளை வரமெனலாம். மனிதநேயம் பேசினாலும், தனியார் கூட்டுறவு நிறுவனங்கள் தடுப்பு மருந்தில் வணிகம் செய்கின்றன. 

கோவாக்ஸ் என்ற முன்முயற்சியின் மூலம் இடைவெளியை நீக்க பிரயத்தனங்கள். ஐக்கிய நாடுகள் சபையும், சீனாவும் மனமிறங்க வேண்டும். போதியளவு தடுப்பு மருந்தை வழங்க வேண்டும். அவ்வாறு நடந்தால், ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஓரளவு மீட்சி பெறலாம். 

2021இல் மீட்சி என்ற சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். பெருந்தொற்றால் பொருளாதாரம் முடங்கி எத்தனையோ துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவை பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். ஐ.நா. மதிப்பீடுகளின் பிரகாரம், கடந்த ஆண்டு 59 கோடி மக்கள் முழுநேரத் தொழில்களை இழந்துள்ளனர். 

வறுமை தீவிரம் பெறுகிறது. உலக சனத்தொகையில் 40 சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். பெருந்தொற்று நிலையில் மேலும் 15 கோடி மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்படலாம். இவர்களது வாழ்க்கையை மீட்சி பெறச் செய்வது, 2021இன் முதன்மைச் சவால். அதனை வெல்லக்கூடிய ஏற்பாடுகள் உள்ளனவா? துரதிஷ்டவசமாக இல்லை. ஏற்றத்தாழ்வு துயரங்களையும், விரக்தியையும் அதிகரிக்கலாம். கூடுதலான சமூக நெருக்கடிகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் வித்திடக்கூடும்.

கடந்து சென்ற ஆண்டு, தொழில்நுட்பத்தை சிம்மாசனத்தில் ஏற்றியது. இவ்வாண்டும் தொழில்நுட்பம் கோலோச்சலாம். ஆட்கள் வேலை செய்யும் முறை மாறும். வளர்ச்சி கண்ட நாடுகளில் கூடுதலானவர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படலாம். போதிய வசதி குறைந்த நாடுகள், என்ன செய்வதென தத்தளிக்கலாம். 

உலக அரசியலில் ஜோ பைடன் கவனம் பெறக்கூடும். உலகில் தனித்து இயங்கும் நாடாக அமெரிக்காவை மாற்ற டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்தார். அவரது நான்காண்டு கால ஆட்சியில் விளைந்த பாதிப்புக்களை சீர்செய்ய மற்றைய நாடுகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை பைடனுக்கு இருக்கிறது. 

பல்தரப்பு பங்களிப்புடன் கூடிய உலகம் என்பதை சாத்தியப்படுத்த வேண்டுமாயின், சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் மீண்டும் இணைந்து, சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு வித்திடும் பாரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும். 

கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டம் அளித்த உத்வேகத்தில், ஆட்சி நிர்வாகப் பொறுப்பில் அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களுக்கும் இடமளிக்கலாம். அதனையும் தாண்டி, உலக மக்களின் மனித உரிமைகளில் நேர்மை காட்டுவது அவசியம்.

பெருந்தொற்றின் தீவிரத்தில் திரைமறைவிற்கு சென்ற ஆர்ப்பாட்டங்களும், அரசியல் நெருக்கடிகளும், ஆயுதமோதல்களும் ஏராளம். இந்தியாவில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் உச்சம் பெறலாம். ஹொங்கொங்கில் ஜனநாயகம் மாற்றம் கோரும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக, சீனா தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கவும் முடியும். 

பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்கொண்ட வெனிசியூலாவில், முறைகேடாக ஆட்சியைக் கைப்பற்றியதாக குற்றச்சாட்டப்படும் நிக்கலஸ் மதுரோ சர்வாதிகாரப் பிடியை இறுக்கலாம். அவருக்கு சவால் விடுக்கக்கூடிய அரசியல் ஆளுமை கிடையாது. எத்தியோப்பாவிலும் நிகழும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். 

அந்நாட்டை சமஷ்டிக் குடியரசாக மாற்ற பாடுபட்ட ரிக்ரே மக்கள் விடுதலை முன்னணியுடன் முரண்பட்டு, அதன் செல்வாக்குள்ள வடபகுதியில் கிளர்ச்சியை அடக்க படைகளை அனுப்பிய அபி அஹமட். இவ்வாண்டு தேர்தலை நடத்தப் போவதாக அவர் உறுதியளித்தார். தாராளமய பொருளாதாரமும், ஒற்றையாட்சி அரசும் அவரது கனவு. அபி தேர்தலில் வெல்லலாம். அது சுயாட்சி, சமஷ்டி என்ற கோட்பாட்டு ரீதியான பிளவுகளின் அடிப்படையில் பிரச்சினைக்கு வித்திடலாம்.

சிரியாவை மறந்து விட முடியாது. இந்நாட்டின் ஆயுதநெருக்கடி பத்தாண்டை எட்டுகிறது. வன்முறைகளும் இடம்பெயர்வுகளும் தொடர்கின்றன. நெருக்கடிக்கு வித்திட்ட பிரச்சனைகளுக்கு தீர்வில்லை. ஆப்கானிஸ்தானில், அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிக்கிறது. அரசுக்கும் தாலிபான் இயக்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை முடங்கியிருக்கிறது. 

ஒரு நிச்சயமற்ற தன்மை. ஐந்தாண்டு கால நெருக்கடி யெமனையும் சின்னாபின்னமாக்கி இருக்கிறது. ஆயுதமோதல்களுடன் கொரோனா பெருந்தொற்றும் சேர்ந்து மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள 70 சதவீத மக்களுக்கு உதவி தேவை. இந்நாடுகள் மீது உலக சமுதாயம் அக்கறை காட்டி, ஆக்கபூர்வமாக தலையீடு செய்ய வேண்டும். மாறி நடந்தால் பேரவலம் தான்.

2020இல் தேசியவாத சிந்தனையுள்ள அரசுகள் கொரோனா பெருந்தொற்றுச் சூழலைப் பயன்படுத்தி எதேச்சாதிகாரம் நோக்கி நகர்ந்தன. இதனால், சமூகங்களில் கருத்தியல் ரீதியான விரிசல் அதிகரித்தது. 

ஏற்றத்தாழ்வு தீவிரம் பெற்றது. 2021இல் இந்த நிலை மாறுமா? ஆம் என பதிலளிப்பதற்கு, உலக ஒழுங்குமுறையை மாற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் என்ற அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம்.

கடந்த ஆண்டு பெரும்பாலும் முடங்கிக் கிடந்ததால் வளிமண்டலத்தில் குறைந்தளவு கரியமில வாயுவை சேர்த்தோம். இயங்கத் தொடங்கினால் இந்நிலை மாறலாம் என்பது துரதிர்ஷ்டம். இதனைத் தடுக்க எரிபொருள் விலை குறைய வேண்டும். இன்னொரு நிதிநெருக்கடி ஏற்படாதிருப்பதும் அவசியம். 

2020 கற்றுத்தந்த பாடங்கள் பல. அரசியல், சமூக, பொருளாதார கோட்பாடு ரீதியான வேறுபாடுகள் எவையாக இருந்தாலும், அடுத்த மனிதரைத் தொட்டுப் பேசி, அன்புடன் அரவணைக்கும் மனிதநேயம் ஒரு வரம் என்ற பாடம் முதன்மையானது.

அந்த மனிதநேயம் தான் ஆரோக்கியமான வளர்ச்சியின் அடித்தளம் என்பதை புரிந்து கொண்டு, அதனை செயலில் காட்டினால் 2021ஆம் ஆண்டில் உலகின் போக்கு சிறப்பாக இருக்கும்.