தேசிய பட்டியலில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட அத்துரலிய ரத்ன தேரர், சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக  பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.


வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (05.01.2021) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில்  பதவியேற்றார். 

சபாநாயகர் முன்னிலையில்  பதவியேற்றதையடுத்து அவர் உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் கையொப்பமிட்டார். 

கடந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் (அபே ஜனபல கட்சி)  கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரரின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தது. 

ஜாதிக ஹெல உறுமயவை பிரதிநிதித்துவப்படுத்தி 2004ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட ரத்ன தேரர், 2010ஆம் ஆண்டு ஏழாவது பாராளுமன்றத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டார்.

 இவர் 2015ஆம் ஆண்டு எட்டாவது பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் நான்காவது தடவையாகப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யவுள்ளமை குறிப்பிடதக்கது.