இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக பதிவான இரு மரணங்களும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஆண்கள் என்றும் அவர்கள் 71 மற்றும் 86 வயதுடையவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் 37 000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை முதல் என்.எச்.எஸ்.  மாளிகாவத்தை மாடி வீடு குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் அவிசாவைளை பொலிஸ் பிரிவு உடன் அமுலாகும் வரையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாக வில்லை என கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களே இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

எனினும் 3 தினங்களின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கேகாலையில் 17 தொற்றாளர்களும் , கிளிநொச்சியில் ஒரு தொற்றாளரும் , யாழில் 4 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று திங்கட்கிழமை இதுவரை 467 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை  45,241 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 37 817 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 6934 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 215 ஆக உயர்வடைந்துள்ளது.