'நாளைய சுப்பர் ஸ்டார்' என இளைய ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'டொக்டர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

'கோலமாவு கோகிலா' என்ற வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'டொக்டர்'. 

இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.  

இவர்களுடன் யோகி பாபு, வினய், மூத்த நடிகை அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.‌ 

அத்துடன் நிறைவு நாளன்று டொக்டர் பெயர் பொறித்த கேக்கை வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். 

சிவகார்த்திகேயனின் சொந்த பட நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்படுகிறது என்பதால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.