- சஹாப்தீன் - 
சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூட வழங்கக் கூடாதென்ற கொள்கையை பௌத்த இனவாதிகளும், அவர்களினால் அரசியல் இலாபமடைந்து கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளும் தொடர்ந்து இறுக்கமாக பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் நடவடிக்கைகளினால் நாடு எந்தவொரு நலனையும் பெற்றுக் கொள்ளவில்லை. பொருளாதாரம், அரசியல், இனங்களுக்கு இடையிலான மீளிணக்கம், சர்வதேச நாடுகளின் நேசஉறவு போன்றவற்றில் கீறல்களே அதிகரித்து வருகின்றது.  

முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்படும் அரசியல் கொள்கைகளையே தற்போது வரைக்கும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் இந்த நிலைப்பாடு அவர்களின் பிரதேச அபிவிருத்திக்கும், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நலன்களுக்கும் மட்டுமே உதவியுள்ளது. ஆயினும், முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் தோல்வி அடைந்துள்ளமை வெளிப்படையாகும். 

2010ஆம் ஆண்டுகளின் பின்னர் முஸ்லிம்களின் மதவிழுமியங்கள் பௌத்த இனவாத தேரர்களினாலும், அமைப்புக்களினாலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதுடன், அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டுள்ளன. இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் சட்டத்திற்கும், ஒழுங்கிற்கும் சவாலாக இருக்கின்ற பௌத்த இனவாதிகளுக்கும், அமைப்புக்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது முஸ்லிம்களினது மட்டுமன்றி இந்த நாட்டின் மீது உண்மையான பற்றைக் கொண்டவர்களின் கருத்தாகவுள்ளது. 

முஸ்லிம்களின் மதவிழும்மியங்களின் மீது கைவைத்துப் பழகிய பௌத்த இனவாதிகள் கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாதென்று ஆர்ப்பாடங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் உடல்களை உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்களுக்கு அமைய அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று முஸ்லிம்களும், ஏனைய மதத்தினரும் சாத்வீகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு எதிராகவே பௌத்த கடும்போக்கு இனவாதத் தேரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதேவேளை, அரசாங்கம் கூட உலக சுகாதார அமைப்பினது பரிந்துரைகளையும், உலக நாடுகளில் அடக்கம் செய்யப்படும் நடைமுறையையும் கருத்திற் கொள்ளாது, சுகாதார நிபுணர் குழுவின் முடிவுதான் சிறந்ததென்று உடல்களை தகனம் செய்து கொண்டிருப்பது இலங்கைப் பிரஜைகளின் அடக்கம் செய்யும் உரிமையை மறுக்கும் ஒன்றாகும். 

இலங்கையின் இந்த முடிவுக்கு எதிராக உலக நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினரின் அரசியல், பொருளாதார, காணி போன்ற அடிப்படை உரிமைகளை மறுதலித்துக் கொண்டிருக்கின்ற பௌத்த இனவாதிகளும், அரசாங்கமும் அவர்களின் அடக்கம் செய்யும் உரிமையை மறுப்பதால் மிகப் பெரிய அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும், விஞ்ஞானபூர்வத்தையும் புரிந்து கொள்ளாது அல்லது வேண்டுமென்று நியாயமற்றவாறும், விஞ்ஞானத்திற்கு மாற்றமாகவும் கொரோனாவினால் மரணிக்கின்றவர்களை தகனம் செய்தேயாக வேண்டுமென்ற முடிவினை திணிப்பதென்பது சர்வதிகார நடவடிக்கையாகவே இருக்கின்றது.

இதேவேளை, முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. அரசாங்கம் பௌத்த இனவாத தேரர்களையும், அமைப்புக்களையும் பகைத்துக் கொள்ளாத படி முடிவுகளை எடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. 

கொரோனாவினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதா என்று ஆராய்ந்து இறுதி முடிவினை எடுப்பதற்காக 2020 டிசம்பர் 31ஆம் திகதி சுகாதார அமைச்சில் கூடிய இரண்டு நிபுணர்கள் குழுக்களும் தீர்மானத்தை எடுக்காது கலைந்துள்ளன. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் ஒரு குழுவும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவினால் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஒரு விடயத்தை ஆராய்வதற்கு இரண்டு நிபுணர்கள் குழுக்களை அமைத்துள்ளமை மூலமாக அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதில் அரசாங்கத்தின் நிலையை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

கொரோனாவினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்தால் பௌத்த கடும்போக்குவாத தேரர்களினதும், பௌத்த மேலாதிக்கவாதிகளினதும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியேற்படுமென்பது அரசாங்கத்தின் முடிவாகும். இன்றைய ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்கு பௌத்த கடும்போக்குவாத தேரர்களும், பௌத்த மேலாதிக்கவாதிகளும் மிகப் பெரிய பங்களிப்பை செய்துள்ளனர். 

இந்த அரசாங்கத்தை நாங்கள் நிறுவினோமென்று உரிமையும் கோரிக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் எங்களின் கொள்கைகளுக்கும், வேண்டுகோள்களுக்கும் எதிராக செயற்பட முடியாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம். எங்களை மீறிச் செயற்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோம் என்றும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால், அரசாங்கம் சுகாதார நிபுணர் குழுக்களின் முடிவுகளை அமுல்படுத்துவோம் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை, சுகாதார நிபுணர் குழுக்களின் முடிவுகள் அடக்கம் செய்வதற்கு சாதகமாக இருக்குமென்றும் நம்ப முடியாதுள்ளது. அரசாங்கம் தமது பொறுப்பிலிருந்து விடுபடுவதற்காகவே சுகாதார நிபுணர்கள் குழுக்களிடம் இறுதி முடிவு எடுப்பதற்கு ஒப்படைத்துள்ளது. இக்குழுக்களில் கூட அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும், அனுமதிகக் கூடாதென்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களும் உள்ளார்கள். 

ஏற்கனவே இலங்கை சுகாதார நிபுணர் குழு தகனம் செய்வதன் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியுமென்று தெரிவித்த போது, பிரபல்யமான வைத்தியப் பேராசிரியர்களும், வைரஸ் பற்றிய ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும் அடக்கம் செய்வதனால் எந்த ஆபத்தும் ஏற்படாதென்று தெரிவித்துள்ளார்கள். 

ஆனாலும், இலங்கையின் சுகாதார நிபுணர்கள் தமது முடிவிலிருந்து மாறவில்லை. இதனால், கொரோனாவினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வது என்பதில் அரசியல் தலையீடுகள் அல்லது சுகாதார நிபுணர்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவினை மாற்றுவதில் கௌரவப் மனப்போக்கை கொண்டவர்களாக உள்ளார்களா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இதே வேளை, கொரோனாவினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை அடக்கம் செய்வதனால் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்களில்லை என்று இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதால் கொரோனா பரவல் ஏற்படாதென்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அரசாங்கம் விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகளை அமுல்படுத்திக் கொண்டிருப்பதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். 

தனியே முஸ்லிம்ளின் பிரச்சினையாக மாத்திரம் நோக்கப்பட்ட இவ்விவகாரம் தற்போது மூவின மக்களினதும் பிரச்சினையாகவும், தேசியப் பிரச்சினையாகவும் வளர்ந்துள்ளது. அதுமட்டுமன்றி சர்வதேச பிரச்சினையாகவும் மாறியுள்ளது. 

இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு மறுத்துக் கொண்டிருப்பதற்கு எதிராக பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. 

கொரோனாவினால், மரணிக்கும் உடல்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை எந்தக் காரணமுமின்றி இலங்கை அதிகாரிகள் மீறிவிட்டனர் என்றும்  பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுக் கொண்டிருப்பதனை அரசாங்கம் கருத்திற் கொண்டு உலக நாடுகளில் உள்ள நடைமுறையை இலங்கையிலும் அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

மேலும், அடக்கம் செய்யக் கூடாதென்று எதிர்ப்புக்காட்டும் பௌத்த கடும்போக்குவாதிகளை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவதென்பது அரசாங்கத்திற்கு சிரமமான காரியமாக இருக்கப்போவதுமில்லை.