-சத்ரியன் -

“ரணில் - மைத்திரி கூட்டு அரசாங்கத்துக்குள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எவ்வாறு நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாமல் போனதோ, அதேநிலை தான் இப்போது பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டுடனும் ஏற்பட்டிருக்கிறது”

பொதுத்தேர்தல் முடிந்து சில மாதங்களுக்குள்ளாகவே, ஆளும் “மொட்டு” கூட்டணிக்குள் புகைச்சல்கள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. பொதுஜன பெரமுன கூட்டணியில் பங்காளிக் கட்சியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பில் இருந்தே, இப்போது போர்க்கொடி உயர்த்தப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து விலகப்போவது போன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பில் இருந்து, சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.

இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ரணில் - மைத்திரி கூட்டு அரசாங்கத்துக்குள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எவ்வாறு நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாமல் போனதோ, அதேநிலை தான் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் தான், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சதி செய்வதாக அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றம் சாட்டியிருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்தபோது ஐக்கிய தேசிய தேசியக் கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிவழியில் சென்றது.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து விட்டு, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக்கப்பட்டார். 52 நாட்கள் நீடித்த அந்த ஆட்சிக் கவிழ்ப்பு குழப்பத்துக்கு, முக்கியமான காரணம், மைத்திரிபால சிறிசேனவும், அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தான்.

மைத்திரிபால சிறிசேனவே தங்களை தவறான வழிக்கு கொண்டு வந்து விட்டார் என்று, பின்னாளில், ராஜபக்ஷவினர் குற்றம் சாட்டியிருந்தனர். கூட்டு அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் அதிகரித்தபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கிளர்ச்சி செய்தனர்.

அவர்களுக்கு அப்போது, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாகிய பொதுஜன பெரமுன பக்கபலமாக இருந்தது. அதனை வைத்தே அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை மடக்க முனைந்தனர். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் சேர்ந்த நிகழ்த்திய அந்த ஆட்சிக்கவிழ்ப்பு வெற்றியளிக்கவில்லை.

அதற்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒட்டிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சூழலுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன பெரமுன விழுங்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவும், குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களையும் மட்டுமே கொண்டதாக அது சுருங்கிப் போனது.

இதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக கரைத்து விட்டு, அதனை பொதுஜன பெரமுனவுக்குள் இழுத்துக் கொள்ளலாம் என்று ராஜபக்ஷவினர் கருதினார்

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேல் மட்டத்தில் ஏற்பட்ட பிளவுகள் போல, கீழ் மட்டத்திலோ அதன் ஆதரவுத் தளத்திலோ பிளவுகள் இருக்கவில்லை. அவர்கள் மொட்டுக்கு மாறவில்லை. சுதந்திரக் கட்சி தன்னிடம் 15 இலட்சம் வாக்குகள் உள்ளதாக அடிக்கடி கூறிக் கொள்வது வழக்கம்.

அந்த எண்ணிக்கை சரியானதா என்று கூற முடியாவிடினும், அதற்கென பல இலட்சம் வாக்குகள் உள்ளது என்பதும், அந்தப் பாரம்பரிய வாக்குகள் ராஜபக்ஷவினர் பக்கம் செல்லத் தயாராக இல்லை என்பதும் உள்ளூராட்சி, ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில் வெளிப்பட்டிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் தான், ஜனாதிபதி தேர்தலில் அந்தக் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு பொதுஜன பெரமுன முற்பட்டமைக்குக் காரணம்.

அதுபோலவே, பொதுத்தேர்தலிலும், சுதந்திரக் கட்சியை கைகழுவி விட்டுப் போயிருக்க முடியும்.

ஆனால், சுதந்திரக் கட்சிக்கு உரிய இடங்களைக் கொடுக்காமலும், அதேநேரத்தில் சுதந்திரக் கடசி வாக்குகளை நிரப்பிக் கொள்ளும் வகையிலும் மொட்டு திட்டம் போட்டு நடந்து கொண்டது.

இதன் மூலம் தான், பொதுஜன பெரமுனவினால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நெருங்க முடிந்தது. அதேவேளை, பொதுத்தேர்தலுக்கு முன்பிருந்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கரைந்து போகச்  செய்வதற்கான வேலைத் திட்டங்களை பொதுஜன பெரமுன முன்னெடுத்து வந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வெற்றிபெறக் கூடிய இடங்களில் போதிய இடங்கள் கொடுக்கப்படவில்லை.

பல மாவட்டங்களில் மூன்று வேட்பாளர்களுக்கு சுதந்திரக் கட்சி இடம் கேட்டது. ஆனால் ஒரே ஒரு வேட்பாளருக்குத் தான் இடமளிக்கப்பட்டது. களுத்துறை, நுவரெலிய மாவட்டங்களில் போட்டியிட இடமளிக்கப்பட்டவேயில்லை. யாழ்ப்பாணத்திலும் இந்த மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டது.

இதனால், 25 ஆசனங்களைப் பெறக்கூடிய தமது கட்சிக்கு இப்போது பாராளுமன்றத்தில் 14 ஆசனங்கள் தான் இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. அவர் தனிப்பட்ட முறையிலும் தற்போதைய, அரசாங்கத்திடம் ஏமாந்து போயிருக்கிறார்.

அவர் வலுவானதொரு பதவியை இந்த அரசாங்கத்தில் எதிர்பார்த்தார். ஆனால் எந்தப் பதவியும் அவருக்கு கொடுக்கப்பட்டவில்லை. இது மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. அதேவேளை, தயாசிறி ஜயசேகர, துமிந்த திசநாயக்க போன்ற கட்சியின் முக்கிய தலைவர்கள் எதிர்பார்த்த பதவிகளும் வழங்கப்படவில்லை.

ஆக, தற்போதைய அரசாங்கம் தங்களை வஞ்சிக்கிறது- ஓரம்கட்டுகிறது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர்கள் இவ்வாறு உணருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இன்னமும் இணைந்திருக்கின்ற அதன் உண்மையான விசுவாசிகள், ராஜபக்ஷவினரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று உணருகிறார்கள். அவ்வாறானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை, தற்போதைய தலைவர்கள் காணாமல் போகச்செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சுதந்திரக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் இந்தக் கருத்தை மைத்திரிபால சிறிசேனவினாலோ, அல்லது ஏனைய தலைவர்களாலோ புறக்கணிக்க முடியாதுள்ளது.

அடுத்து, மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், இப்போதே போர்க்கொடி உயர்த்தினால் தான், பொதுஜன பெரமுனவிடம் கூடுதல் இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை பெற முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மையானாலும், அவர்களின் இப்போதைய நோக்கம், மாகாணசபைத் தேர்தல்களை அடிப்படையாக கொண்டது தான்.

இந்த துள்ளிக்குதிப்பின் பின்னாலுள்ள நோக்கங்களை “மொட்டு” புரிந்து கொள்ளாமல் இருக்காது.

ஆனாலும், சுதந்திரக் கட்சி தலைவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று செஹான் சேமசிங்க போன்றவர்கள் புலம்புகின்ற அளவுக்கு, சுதந்திரக் கட்சி ஒன்றும் பலமாகவோ, பொதுஜன பெரமுன ஒன்றும் பலவீனமாகவோ இல்லை.

சுதந்திரக் கட்சியினர் வெளியேறினால் கூட, மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சாதாரண பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சியை தொடர முடியும்.

எனவே, சுதந்திரக் கட்சியினாலும் ஓரளவுக்கு மேலே துள்ளிக் குதிக்க முடியாது. பொதுஜன பெரமுனவினாலும் அதிகமாக விட்டுக்கொடுக்க முடியாது. இது தான் இப்போதுள்ள யதார்த்தம்.