நைஜரின் இரு கிராமங்கள் மீது தீவிரவாதிகள் சனிக்கிழமையன்று மேற்கொண்ட தாக்குதல்களில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக அந் நாட்டு பிரதமர் பிரிஜி ரபினி தெரிவித்துள்ளார்.

மாலியுடன் எல்லை மண்டலத்திற்கு அருகிலுள்ள நைஜரின் டொம்பங்கோ என்ற கிராமத்தில் 70 பேரும், ஸாரூம்தரேய் என்ற கிராமத்தில் 30 பேரும் கொல்லப்பட்டதாக பிரிஜி ரபினி கூறினார்.

குறித்த இரு கிராமங்களில் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 70 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்திருந்தன.

இந் நிலையிலேயே பிரதமர் பிரிஜி ரபினி இரு கிராமங்களுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் தேசிய தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட உரையொன்றில் இறப்பு எண்ணிக்கையை அவர் அறிவித்தார்.

எனினும் தாக்குதல்களுக்கு யார் காரணம் என்று அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக இரண்டு தீவிரவாதிகளை கிராமவாசிகள் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம் அண்டை நாடான மாலியில் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள் நைஜருக்குள் நுழைந்ததாக சந்தேகிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறெனினும் என்ன நடந்தது என்று விசாரிக்க அரசாங்க ஒரு தூதுக்குழுவை இப் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.