இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணியானது தனது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 148 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது தென்னாபிரிக்க அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் தொடரின் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வொண்டர்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தினேஷ் சந்திமல் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோருக்கு பதிலாக லஹிரு திரிமன்னே மற்றும் மினோட் பானுகா ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களான கசுன் ராஜிதா மற்றும் லஹிரு குமாரா ஆகியோருக்கு பதிலாக துஷ்மந்தா சமீரா மற்றும் அசிதா பெர்னாண்டோவும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மினோட் பானுகா மற்றும் அசிதா பெர்னாண்டோ இருவரும் இன்றைய போட்டியில் இலங்கைக்காக  டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கும் 152 வது மற்றும் 153 வது வீரர்கள் ஆவர்.

இது இவ்வாறிருக்க முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியை தென்னாபிரிக்காவின் வேகப் பந்து வீச்சாளர்களான அன்ரிச் நொய் மற்றும் வியன் முல்டர் ஆகியோர் 157 ஓட்டங்களுக்குள் அடி பணியச் செய்தனர்.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா மாத்திரம் அதிகபடியாக 60 ஓட்டங்களை பெற, அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 2 ஓட்டங்களையும், திரிமான்ன 17, ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் டக்கவுட்டுடனும், மினோட் பானுக 5 ஓட்டங்களையும், திக்வெல்ல 7 ஓட்டங்களையும், சானக்க 4 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களையும், சாமர 22 ஓட்டங்களையும், அசித பெர்னாண்டோ 4 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க விஷ்வ பெர்னாண்டோ 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் அன்ரிச் நொய் 6 விக்கெட்டுகளையும், வியன் முல்டர் 3 விக்கெட்டுகளையும் மற்றும் லூத்தோ சிபாம்லா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியானது நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 148 ஓட்டங்களை குவித்துள்ளது.

தொடக்க வீரர்களில் ஒருவரான ஐடன் மார்க்ராம் 5 ஓட்டங்களுடன் அசித பெர்னாண்டோவின் பந்து வீச்சில் குசல் மெண்டீஸிடம் பிடிகொடுத்து வெளியேற, எல்கர் 92 ஓட்டங்களுடனும், வேண்டர் டுசென் 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

தென்னாபிரிக்க அணிக்கு இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை சமன் செய்ய இன்னும் 09 ஓட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஆகும்.

.