ஒரு மாத கால இடைவெளிக்குள் மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நான் சற்றேனும்  நினைத்திருக்கவில்லை. புத்தாண்டில் நீங்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழக சட்டசபை தேர்தலில் சகல தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபடும்போது நிலைவரத்தை பொறுத்து உங்களுக்கு மீண்டும் எழுதலாம் என்றுதான்  நினைத்திருந்தேன். ஆனால், நீங்களோ அரசியலில் குதிக்கப்போவதேயில்லை என்று இப்போது அறிவித்துவிட்டீர்கள்.

    இந்த தீர்மானம் நிச்சயமாக உங்களது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனால், கடந்த சுமார் கால் நூற்றாண்டு காலமாக அரசியல் பிரவேசம் குறித்து நீங்கள் வெளிக்காட்டிய தடுமாற்றமான நிலைப்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வந்திருப்பவர்களுக்கு  உங்கள் முடிவு பெரும்பாலும் அதிர்ச்சியை தந்திருக்காது. ஒருவேளை, அவர்கள் இத்துடன் உங்கள் அரசியல் பிரவேச 'சித்து விளையாட்டு' முடிவுக்கு வந்துவிட்டதாக திருப்திப்பட்டிருக்கக்கூடும்.

   எது எவ்வாறிருந்தாலும், அரசியலுக்கு வருவதில்லை என்ற உங்கள் முடிவு இறுதியும் அறுதியுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களது சுகவீனத்தை நீங்கள் காரணமாகக் கூறியிருக்கிறீர்கள். உங்களை நம்பி அரசியல் களத்தில் இறங்கக்கூடியவர்களை இடைநடுவில் ஏமாற்றிவிடக்கூடாது என்றும் அவர்களை பலிக்கடாக்களாக்கிவிடக்கூடாது என்றும் நீங்கள் கூறியிருப்பது  நிச்சயமாக வரவேற்கவேண்டியதாகும். உங்களை மாத்திரமே நம்பி முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய அரசியல் செயற்பாடுகளுக்கு உங்கள் சுகவீனம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை உணர்ந்து நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள். உங்களால் இயலாமல் போனால் உங்கள் பெயரிலான அரசியல்  இயக்கத்தை முன்னெடுக்கு உருப்படியான ஆள் எவரும் இல்லை என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் போலத் தெரிகிறது.

   உங்களது அறிவிப்புக்கு பிறகு தமிழக அரசியல் நிலைவரம் குறித்து எழுதிய அரசியல் அவதானிகளில் பெரும்பாலும் சகலருமே' தமிழக அரசியல் வழமைக்கு திரும்பியிருக்கிறது ' என்று குறிப்பிட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள். உங்களது அரசியல் பிரவேசம் மாநில அரசியலை புரட்டிப்போட்டிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள் போலும். உண்மை என்னவென்றால், கடந்த பல தசாப்தங்களாக மாநில  திராவிட இயக்க அரசியலில் இரு பெரும் முகாம்களாக ஆதிக்கம் செலுத்திவருகின்ற அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலேயே இத்தடவையும் சட்டசபை தேர்தலில் பிரதான போட்டி இருக்கப்போகிறது.

    ஆனால், அதிலும் சிறியதொரு மாற்றம். அதாவது, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் - ஜனரஞ்சக  ஆளுமைகளின் தலைமையில் இதுவரை சட்டசபை தேர்தல்களை எதிர்நோக்கிய இரு கழகங்களும் புதிய தலைமைகளின் கீழ் இத்தடவை களமிறங்கியிருக்கின்றன.

   கலைஞரும் ஜெயலிதாவும் இல்லாமல் 2019 லோக்சபா தேர்தலை இரு கழகங்களும் எதிர்கொண்டதும் அதில் தி.மு.க.வின் பிரமாண்டமான வெற்றி மு.க.ஸ்டாலினின் தலைமைத்துவ தகுதிக்கான சான்றிதழாக அமைந்ததும் உங்களுக்கு தெரியும்.  ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை , ஆட்சியை கவிழாமல் மூன்றரை வருடங்கள் வைத்திருப்பதனால் அவரைப் பற்றி ஒரு பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அந்த பிம்பத்தின் கதியை  சட்டசபை தேர்தலில் காணக்கூடியதாக இருக்கும். இவர்கள் இருவருக்கும் இடையில் நீங்கள் அரசியலில் குதித்தால் மாநில அரசியல் கோலங்களில் ஒரு மாற்றம் ஏற்படக்கூடும் என்று சிலர் போட்ட கணக்கு பிழைத்துப்போய் விட்டது.

   உங்கள் கட்சியின் பெயரை அறிவித்து அதன் ஒருங்கிணைப்பாளரையும் மேற்பார்வையாளரையும் நீங்களே நியமித்த பிறகு அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று நீங்கள் அறிவித்திருப்பது பல்வேறுவகையான  ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. செல்வாக்கு மிக்க அரசியல் சக்திகளின் நெருக்குதலே உங்கள் முடிவுக்கு காரணம் என்றும் ஊடகங்கள் எழுதுகின்றன. மாநில அரசியலில் செல்வாக்கு பரீட்சிக்கப்படாத ஒரு அரசியல் சக்தியாக நீங்கள் என்றென்றைக்கும் பேசப்படப்போகிறீர்கள் என்றும் சில அவதானிகள் கூறுகிறார்கள். அதேவேளை, அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றாலும் நீங்கள் தெரிவிக்கக்கூடிய கருத்துக்கள் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில அரசியல் சக்திகள் நம்புகி்ன்றன.

   நீங்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதால் தமிழகத்தின் சிறிய கட்சிகளுக்கு திருப்தி. நீங்கள் தேர்தல் அரசியலில் இறங்கினால் தங்களது ஒற்றை எண் சதவீத வாக்குகள் உங்கள் செல்வாக்கிற்குள் கரைந்து போய்விடும் என்று அந்த கட்சிகள் அச்சங்கொண்டிருந்தன. உங்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு ஆர்வம் கொண்டிருப்பதாக  அறிவித்த  கமல்ஹாசனுக்கும் உங்கள் முடிவு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கக்கூடும்.

  எல்லோரையும் விடவும் காந்தி மக்கள் இயக்கத் தாபகர்  தமிழருவி மணியன்தான் உண்மையில் பரிதாபத்துக்குரியவர். எத்தனையோ இயக்குநர்களின் நெறியாள்கையில் எத்தனையோ திரைப்படங்களில் சக்கைபோடுபோட்ட உங்களை பின்னால் இருந்து இயக்கி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த மணியன் ' உயிருள்ளவரை அரசியல் பேசமாட்டேன்' என்று சபதம் எடுத்துக்கொண்டு வீட்டுக்குபோய்விட்டார். தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான அவர் உங்களை நம்பி இறுதியில் இந்தக் கதிக்கு ஆளானார். அவருக்கு என்ன ஆறுதல் சொன்னீர்களோ?

   உங்களது அரசியல் பிரவேசம் பற்றி பேசும்போது நாம் ' வரும்....ஆனா...வராது....' என்று பகிடியாக கூறுவோம். இனிமேலாவது ....வரவே ....வராது .....என்று கூறலாமா?

இப்படிக்கு 
ஊர்சுற்றி