(செ.தேன்மொழி)

தணமல்வில, பொத்துவில் ஆகிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைக்கப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தணமல்வில - கல்கொட்டுகந்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மூன்று கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. 

இதன்போது முளை நிலை கஞ்சா செடிகள் அடங்கிய இரு தோட்டமும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தோட்டத்தில் 17 ஆயிரம் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த கஞ்சா செடிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதன் பின்னர் ,அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக தணமல்வில பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை பொத்துவில் - பத்மிட்டியாவ பகுதியில் நேற்று விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 4 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்த குறித்த தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கச்ஞா செடிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

கஞ்சா செடிகளை பயிரிட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன்,அவர்களை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேற்படி சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.