-கபில் -

“கரணம் தப்பினாலும், மரணம் நிச்சயம் என்ற நிலையில் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மீண்டும் ஆர்னோல்ட்டை முதல்வராக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றமை ஆச்சரியம் தான்”

 “கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் முதல்வர் வேட்பாளர் தொடர்பான அனைத்தையும் வழிநடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்து விட்டு தனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று கூறுவது அரசியல் தலைவர் ஒருவரின் பொறுப்புணர்வை கேள்விக்குட்படுத்துகிறது”

 “மணிவண்ணன்  மேயராக தெரிவாகியதில் இலபமடைந்தது, சாணக்கியமாக காய்களை நகர்த்தியிருக்கும் ஈ.பி.டி.பி.யும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் தான்”


யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் பதவி தமிழரசுக் கட்சியிடம் இருந்து பறிபோயிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் விவேகமற்ற, அரசியல் சாதுரியமில்லாத நகர்வு தான், இந்த நிலைமைக்குக் காரணம் என்ற பரவலான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

யாழ்ப்பாண மாநகரசபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை, நிறைவேற்றுவதில், இரண்டு முறை தோல்வியடைந்ததால், முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் பதவியிழக்கும் நிலை ஏற்பட்டது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும், அதற்கு பெரும்பான்மை பலம் இல்லை.

ஈ.பி.டி.பி., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்பு என, மும்முனை போட்டி நிலவியதால் 2012இல், முதல்வர் பதவியை ஆர்னோல்ட்டினால் கைப்பற்ற முடிந்தது.

ஆனால், வரவுசெலவுத் திட்டத்தை அவரால், பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற முடியவில்லை.

இந்தநிலையில், அவரை மீண்டும் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்த தமிழரசுக் கட்சி முடிவு செய்ததும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதற்கு தலையாட்டியதும் தான், இந்த தலைகுனிவுக்கு பிரதான காரணம்.

இந்த தோல்வி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

கரணம் தப்பினாலும், மரணம் நிச்சயம் என்ற நிலையில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை இருந்தது.

ஏனென்றால், இந்த முறையும், ஆர்னோல்ட் தப்பித் தவறி வெற்றி பெற்றிருந்தால் கூட, மீண்டும் வரவுசெலவுத் திட்டத்தில் அவர் தோல்வியடையும் ஆபத்து இருந்தது.

அவ்வாறான நிலை ஏற்பட்டால், யாழ்ப்பாண மாநகரசபை கலைந்து போய், உள்ளூராட்சி ஆணையாளரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலை காணப்பட்டது.

இந்த ஆபத்தை உணர்ந்திருந்தும் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மீண்டும் ஆர்னோல்ட்டை முதல்வராக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றமை ஆச்சரியம் தான்.

இதனால், கூட்டமைப்பு இப்போது வடக்கின் பிரதான நகரின் நிர்வாகத்தை பறிகொடுத்து விட்டு நிற்கிறது. ஆர்னோல்ட் 20 வாக்குகளையே பெற முடிந்திருக்கிறது. சுமந்திரனின் ஆதரவாளரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்ததும் கூட இந்த நிலைக்கு காரணம். இல்லாவிடின், குலுக்கல் மூலம் மாநகர முதல்வர் தெரிவாகியிருப்பார். அது ஆர்னோல்ட்க்கு சாதகமானதாகவும் இருந்திருக்கக் கூடும்.

எவ்வாறாயினும், யாழ். மாநகர முதல்வர் தெரிவில், தீர்க்கமான பங்கை வகித்தது ஈ.பி.டி.பி. தான். மாநகரசபையில் ஈ.பி.டி.பி.க்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஆர்னோல்ட்டை தோற்கடிப்பதற்கு கங்கணம் கட்டி செயற்பட்டனர்.

மணிவண்ணனுக்கு அவர்கள் வாக்களித்ததால், முன்னணியின்10 உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி.யின் 10 உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வராகியிருக்கிறார்.

கூட்டமைப்பு தலைமை இந்த தோல்வியைத் தவிர்த்திருக்கும் சூழல் இருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறிலை, கூட்டமைப்பு போட்டியில் நிறுத்தியிருந்தால், அவர் ஒருமனதாக தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பு இருந்தது.

அவ்வாறானதொரு சூழலுக்கான வாய்ப்பு உருவாக விடாமல், தமிழ் அரசுக் கட்சியின் தலைமை கெடுத்து விட்டதாக பலமான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனை மாவை.சேனாதிராஜாவுக்கு எழுதிய கடிதத்தின் மூலம், பொதுவெளிக்கு கொண்டு வந்து, பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறார் சுமந்திரன். இந்த விடயத்தில், ஈ.பி.டி.பி. நாசூக்காக நடந்து கொண்டு, தமது பிரதான எதிரிகளை பிளவுபடுத்துவதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஆர்னோல்ட் தோற்கடிக்கப்பட்டதன் மூலம், தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் ஏற்படும். தலைமைக்கு எதிராக, ஆர்னோல்ட்டை நிறுத்தியவர்களுக்கு எதிராக கடும் அதிருப்தி ஏற்படும் என்பதை ஈ.பி.டி.பி. நன்றாக கணித்திருக்கிறது. மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் ஆர்னோல்ட் தோற்கடிக்கப்பட்டு, கூட்டமைப்பிடம் இருந்து யாழ். மாநகரம் பறிக்கப்பட்டதுடன், கூட்டமைப்புக்குள்ளேயும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது ஈ.பி.டி.பி.

இன்னொரு பக்கம், ஈ.பி.டி.பி.யை துரோகிகள் என்று எப்போதும் திட்டிக் கொண்டிருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன், மணிவண்ணன் முதல்வராகியிருக்கிறார்.

இதன் மூலம், முன்னணி தலைமையின் எதிர்ப்புக்கு மத்தியில், அவர் வெற்றி பெற்றிருக்கிறார். முன்னணிக்கு சவாலான ஒரு தலைமை உருவாக்கப்படுவது ஈ.பி.டி.பி.க்கு சாதகமானது தான். ஏனென்றால், கடந்த தேர்தல்களில் ஈ.பி.டி.பி.யை விட குறைந்த வாக்குகளைப் பெற்று வந்து முன்னணி, அண்மைய பொதுத்தேர்தலில் ஈ.பி.டி.பி.யை பின்னுக்குள் தள்ளியிருந்தது.

அவ்வாறான கட்சியின் வாக்கு வங்கி உடைக்கப்படுவதை சாதகமானதாகவே ஈ.பி.டி.பி. நோக்குகிறது. அதேவேளை, மணிவண்ணன் மீது ஈ.பி.டி.பி. காதல் கொண்டு இதனை செய்தது என்றில்லை. அவரை முன்னணியினர் இன்னும் அதிகமாக துரோகி என்று தூற்றுவார்கள். ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து ஆட்சியமைத்ததாக குற்றம் சாட்டுவார்கள்.

அவ்வாறான நிலையில், மணிவண்ணனின் பெயரும் கெட்டுப் போகும். அவரும் தனிமைப்படுத்தப்படுவார். இது  இன்னொரு சாதகம். ஆக மொத்தத்தில் யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் தனக்கு சவாலான மூன்று தரப்புகளையும் பலவீனப்படுத்த இந்த வாய்ப்பை டக்ளஸ் தேவானந்தா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதேவேளை, இந்த விடயத்தில் வெளியே தெரியாத இன்னொரு தரப்புக்கும் இலாபம் கிட்டியிருக்கிறது. அது தான் சுமந்திரன் தரப்பு. அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும் அவருக்கும் இடையில் இன்னமும் முரண்பாடுகள் நீடிக்கின்றன. மாவை.சேனாதிராஜா சொலமன் சிறிலை இப்போது வெட்டியாட முனைந்த போது, சுமந்திரனுக்கு அது வாய்ப்பாக மாறியிருக்கிறது. இதே சுமந்திரன் தான், கடந்த முறை சொலமன் சிறிலை வெட்டி விட்டு, ஆர்னோல்ட்டை முதல்வராக நிறுத்தியிருந்தார். இப்போது அவர் குத்துக்கரணம் அடித்திருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தை அவர், ஒரே நேரத்தில் தனது இரண்டு பிரதான போட்டியாளர்களுக்கு ஆப்பு வைப்பதற்கு பயன்படுத்தியிருக்கிறார். அவரால் ஆப்பு வைக்கப்பட்ட இருவரில் ஒருவர், கூட்டமைப்பின் அடுத்த தலைவராகும் கனவில் உள்ள மாவை.சேனாதிராஜா. அவர் இந்த விவகாரத்தை சரியாக கையாளத் தவறியதால் தான், மாநகரசபையை இழக்க நேரிட்டது என்று பகிரங்கமாக- அனுப்பியுள்ள கடித்ததில் சுட்டிக்காட்டியிருக்கிறார் சுமந்திரன். இதன் மூலம், அரசியல் உத்திகள் தெரியாத- அதனைச் சரியாக கையாளத் தெரியாத தலைவராக, மாவையை அடையாளப்படுத்த முனைந்திருக்கிறார்.

எற்கனவே, பொதுத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், மாவையை தோல்வியுற்ற தலைவராக சுமந்திரன் விழித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்திரனின் வியூகத்துக்குள் சிக்கிய இரண்டாவது தரப்பு கஜேந்திரகுமார். மணிவண்ணனுக்கும் முன்னணி தலைமைக்கும் ஏற்பட்ட விரிசலை பூதாகாரப்படுத்தி, திரைமறைவில் நின்று அவரை மாநகர முதல்வர் பதவிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருப்பவர் சுமந்திரன் தான். மணிவண்ணனுக்கு எதிரான வழக்கை சுமந்திரன் விலக்கிக் கொண்டதால் தான், அவரால் மாநகரசபை உறுப்பினராக அமர்வுகளில் பங்கேற்க முடிந்தது. அதற்குப் பின்னர் சுமந்திரனுக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் சட்ட விவகாரங்களில் நெருக்கங்கள் இருந்தன.

அத்துடன், அவர்களுக்குள் இரகசிய உறவு உள்ளதாகவும் பரவலான பேச்சு காணப்பட்டது. இப்போது, மணிவண்ணன் முதல்வர் பதவியை அடைவதற்கு சுமந்திரனும் வழியமைத்துக் கொடுத்திருக்கிறார். இதன் மூலம், மணிவண்ணனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் இடையிலான பிளவு நிரந்தரமாக்கப்பட்டு விட்டது. அதேவேளை, அவரது ஆதரவாளர்கள் 10 பேரையும், முன்னணியின் தலைமைக்கு எதிராக செயற்பட வைத்து, கஜேந்திரகுமாருக்கு பேரிடியைக் கொடுத்திருக்கிறார்.

இந்தளவுக்குப் பின்னரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தனக்கு ஒன்றும் தெரியாது, இதற்கு தான் பொறுப்பல்ல என்று கூறியிருப்பது கூட்டமைப்பு தலைமைத்துவம் தடுமாறுவதையே காட்டுகிறது. பொறுப்பான தலைவராக அவர் முதல்வர் வேட்பாளர் தொடர்பான அனைத்தையும் வழிநடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், இருந்து விட்டு, தனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று கூறுவது அரசியல் தலைவர் ஒருவரின் பொறுப்புணர்வை கேள்விக்குட்படுத்துகிறது.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில், விடப்பட்ட ஒரு தவறு, தமிழ் அரசியல் பரப்பில், பல்வேறு மட்டங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியம் தான்.