(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மாத்திரம் 90 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மோட்டார் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாத்திரம் நாடளாவிய ரீதியில் 90 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், இதன்போது 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 50 பேர் சிறு காயமடைந்துள்ளனர். அதற்கமைய வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்ட 21 விபத்துகளும் இதற்போது பதிவாகியுள்ளன.

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில்  வாகன விபத்துகளில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 படுகாயத்துக்கும், 607 பேர் சிறுகாயத்துக்கும் உள்ளாகியுள்ளனர். இதன்போது இடம்பெற்ற 190 விபத்துகளின் போது வாகனங்களுக்கு  மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக நேற்று சனிக்கிழமை மாத்திரம் 221 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களை வழக்கு விசாரணைக்காக பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். அதற்கமைய குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களை அறிந்துக் கொண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 13 நாட்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக 2,045 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் எவ்வளவு சோதனை நடவடிக்கைகளை செய்தாலும், அதற்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் மாத்திரமே, விபத்துகளை தடுக்கமுடியும். அதனால் புதுவருடப்பிறப்பு காரணமாக பல்வேறு நிகழ்வுகள், விழாக்களில் கலந்துக் கொள்ளுமாறு அழைப்புகள் கிடைக்கப் பெறலாம். தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய அவற்றை தவிர்த்துக் கொள்வதுடன், கட்டாயம் பங்குப்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்காக போக்குவரத்து செயற்பாடுகளில் ஈடுபடும் போது கவனத்துடன் செயற்படுமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.