(நேர்காணல்: ஆர்.ராம்)

  • இலங்கையை குவாட்டினுள் உள்ளீர்ப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் முயற்சிக்கும்
  • தமிழர்களை கைவிட்டு இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காது
  • சீனா விடயத்தில் இந்தியா முன்னெச்சரிக்கையாகவே உள்ளது, டோவல் விஜயத்தின் பின்னணியும் அதுவே.

மேஜர்(ஓய்வுநிலை) மதன்குமார், இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை அதிகாரி. எட்டு ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் இராணுவ சேவையில் பணியாற்றியுள்ளார். இதில் ஆறு ஆண்டுகள் ஜம்மு-கஷ்மீரிலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடும் டெல்டா படையில் இரண்டரை ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார். தற்போது, இராஜதந்திர, மற்றும் பாதுகாப்பு சார்பான ஆய்வாளராகவும் விசேட விரிவுரையாளராகவும் செயற்பட்டு வருகின்றார்”

இந்திய, இலங்கை தரப்புக்களிடையே கடந்தகால நிகழ்வுகளிலிருந்து விடுபடாத போக்கே நீடிக்கும் நிலையில் தற்போது வரையில் இந்தியா, இலங்கை மீதும், இலங்கை இந்தியாவின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்ளவில்லை என்று இந்திய இராணுவத்தின் மேஜர் (ஒய்வுநிலை)மதன்குமார் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தொலைபேசி ஊடாக வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முதற்பகுதி வருமாறு, 

கேள்வி:- இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்குச் சவாலான விடயங்கள் என்னவாக இருக்கின்றன?

பதில்:- இந்து சமுத்திரப்பிராந்தியத்தினைப் பொறுத்தவரையில், இந்தியாவுக்கு இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரண்டு நாடுகளுடன் மட்டுமே கடல் எல்லைகளும் ஏனைய நாடுகளுடன் நிலத்தொடர்புடைய எல்லைகளும் காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில், இலங்கை மற்றும், மாலைதீவு ஆகிய நாடுகளின் உள்ளகப் பாதுகாப்பையும், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலைமையே இருக்கின்றது. 

அந்தவகையில், சீனாவானது, உலகை ஆளும் கனவுடன் ‘ஒரே பட்டி ஒரேபாதை’ திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. இதில் இந்தியா பங்கேற்காத நிலையில் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைத் தம்பக்கம் ஈர்த்து அல்லது கடன்பொறிக்குள் சிக்கவைத்து ‘இந்தியாவின் கழுத்தை நெரிக்கும் மாலை ஒன்றை’ முனைப்புடன் உருவாக்கி வருகின்றது. இந்த நிலைமைகள் மேலும் வலுவடைந்து செல்லாமல் தடுப்பதற்காக இந்தியா இராஜதந்திர, மூலோபாய ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

மாலைதீவில் சீனாவின் தலையீடுகள் அதிகமான போது, இந்தியாவின் உதவியுடன் அரசியல் ரீதியாக அங்கு ஏற்பட்ட மாற்றம் இப்போது சற்று நிம்மதியை வழங்கியுள்ளது. இந்தியா, இலங்கை இடையே தொடர்ச்சியான பரஸ்பர பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

கேள்வி:- 2019 ஆட்சி மாற்றத்தின் பின்னரான அண்மைய காலத்தில் இலங்கை, இந்திய இருதரப்பு உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காண்கிறீர்களா?

பதில்:- இந்திய, இலங்கை இடையே நீண்டகால உறவுகள் காணப்பட்டிருந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகளை வழங்கியமை, இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியமை, இந்திய, இலங்கை ஒப்பந்தம், நான்காவது ஈழப்போர், அதன் பின்னரான அரசியல், பொருளாதார பரஸ்பர விடயங்கள் உள்ளடங்கலானவை அந்தந்த நேரத்தில் இரு நாட்டிலும் ஆட்சியில் இருந்த தலைவர்களின் குறுகிய கால அரசியல் நன்மைகளுக்காகவே கையாளப்பட்டுள்ளது. 

அயல்நாடுகளான இந்தியா, இலங்கை இடையே இரு நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்பி நீண்டகால அடிப்படையில் வலுவானதாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் விடயங்கள் முன்னகர்த்தப்பட்டிருக்கவில்லை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும், அதேபோன்று பூட்டானுக்கும் இடையில் நீண்டகாலத்தினை மையப்படுத்திய திட்டமிடல்கள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கை விடயத்தில் அவ்விதமான நிலைமைகள் காணப்படவில்லை. 

விசேடமாக தற்போது ஆட்சியில் உள்ள ராஜபக்ஷவினர் 2015இல் பதவி இழந்தபோது, இந்தியாவின் புலனாய்வுப்பிரிவின் செயற்பாடுகளே தமது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். அந்தக்கூற்றை அலட்சியப்படுத்திச் செல்லமுடியாது. ஏனென்றால் இராஜதந்திர விடயங்களில் அவ்விதமான செயற்பாடுகள் இடம்பெறுவதுண்டு. 

அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவால் தனது உயிருக்கு ஆபத்து என்று பகிரங்கமாக கூறினார். இவ்விதமான விடயங்கள் இருதரப்பிடையே முழுமையான நம்பிக்கை, புரிந்துணர்வு கட்டியெழுப்பப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் மீண்டும் ராஜபக்ஷ சகோதரர்கள் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். இன்னமும் இந்திய, இலங்கை தரப்புக்களிடையே கடந்தகால நிகழ்வுகளிலிருந்து விடுபடாத போக்கே நீடிக்கின்றது. அதாவது தற்போது வரையில் இந்தியா, இலங்கை மீதும், இலங்கை இந்தியாவின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்ளவில்லை. 

இந்த மனோ நிலையிலிருந்து இரு நாடுகளும் விடுபடுவதன் மூலமே இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகள் மேலும் வலுப்படும் நிலைமைகள் ஏற்படும். இப்போது அதற்கான முயற்சிகள் இருதரப்பிலும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. 

கேள்வி:- இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்து விடும் என்ற அதிக அச்சம் அண்மைக்கால இந்தியாவின் பிரதிபலிப்புக்களில் காணப்படுகின்றதே?

பதில்:- தேசப்பாதுகாப்பு என்ற விடயத்தினை கருத்திற்கொள்கின்றபோது எந்தவொரு நாட்டிற்கும் அவ்விதமான மனோநிலை ஏற்படுவது இயல்பானது. மேலும் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் ஏற்கனவே சீனாவிடம் கையளிக்கப்பட்டு விட்டது. 

தற்போது கொழும்பில் துறைமுக நகர அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை விடவும் பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளில் முதலீடுகளையும், கடன் உதவிகளையும் சீனா இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. இந்தச் சூழலில் சீனாவுடன் முரண்பட்டால் இலங்கைக்கு சீனாவின் கடனை மீளச் செலுத்த வேண்டி ஏற்படும். இலங்கையிடம் அதற்கான வல்லமை எள்ளளவும் இல்லை. உலகில் சீனாவிடம் நிதியுதவி பெற்ற எந்தநாடும் மீளச் செலுத்தியதாக சரித்திரமே கிடையாது. அவ்வாறான பின்னணியொன்று இருக்கையில் சீனா இலங்கையை தனது நலன்களுக்காக பயன்படுத்தவே முயற்சிக்கும் என்பது வெளிப்படையானது. 

விசேடமாக, இந்தியாவின் தென்பகுதிக்குள் பிரவேசிப்பதற்கான நுழைவாயிலாக இருப்பது இலங்கையே. ஆகவே தான் இலங்கை, சீனாவின் பிடிக்குள் முழுமையாக செல்லுமாக இருந்தால் இலங்கையிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள இரமேஸ்வரம் உள்ளிட்ட தென் இந்தியாவின் பாதுகாப்பு நிலைகளின் நிலைமை கேள்விகுறியாகி விடும். ஆகவே இலங்கையை முழுமையாக சீனாவின் பக்கம் சார்ந்து விடாது இராஜதந்திர ரீதியாக எப்போதும் கையாள்வதற்கே இந்தியா முனையும்.

கேள்வி:- இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்விலேயே இந்தியத் தென் பிராந்தியங்களின் பாதுகாப்பு தங்கியுள்ளது என்ற கருத்தினை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

பதில்:- இது வெளிப்படையான விடயம். கொரோனா வைரஸ் நெருக்கடிகள் ஏற்பட்டபோது ராஜபக்ஷவினருடன் பிரதமர் மோடி மெய்நிகர் வழியில் உரையாடினார். அதன்போது, இலங்கைக்கு காணப்படும் கடன்சுமையையும், பொருளாதார வீழ்ச்சி நிலையையும் குறிப்பிட்டு, இந்தியாவிடம் உதவி கோரப்பட்டது.

இந்தியா உதவிகளை அளிக்கத் தவறினால் ‘வெளியில்’ அதனைப் பெறுவதற்கு இலங்கை முயற்சிக்கும் என்று ராஜபக்ஷவினரால் நேரடியாகவே கூறப்பட்டது. அவர்கள் ‘வெளியில்’ என்று குறிப்பிட்டது சீனாவையே. ஆகவே இலங்கையில் சீனாவின் தலையீட்டை கட்டுப்படுத்துவதாக இருந்தால் இந்தியாவுக்கு அந்நாட்டின் தேவையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பாரிய கடப்பாடு காணப்படுகின்றது. 

அதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் கூறும் அனைத்து விடயங்களுக்கும் இந்தியா தலைசாய்த்து அந்நாட்டு மத்திய அரசுடன் இணைந்து செல்லும் என்றும் கூறமுடியாது. ஏனென்றால் குறித்த உரையாடலில் பிரதமர் மோடி, இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்கும்படி வலியுறுத்தினார். 

ராஜபக்ஷ சகோதரர்கள் சிங்கள தேசியவாத சித்தாந்தத்துடன் தமிர்களை ஒதுக்கிச் செல்லமுடியாது என்பதையும் இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியா திடமாகவுள்ளது என்பதையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருக்கிறார். 

அவ்விதமான பிரதிபலிப்பானது, இலங்கைத் தமிழர்களின் விடயத்துடன் இந்தியத் தேசத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பு பட்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. 

கேள்வி:- அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர், இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஆகியோர் ‘பிளஸ் 2’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வருகை தந்திருந்ததோடு பொம்பியோ இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சடுதியான விஜயங்களை மேற்கொண்டதன் பின்னணி என்ன?

பதில்:- அமெரிக்கா சீனாவையும், சீனா அமெரிக்காவையுமே தமது போட்டியாளர்களாக கருதுகின்றன. அவ்வாறிருக்க, சீனா, அமெரிக்காவுடன் நேரடியாக முட்டிமோதுவதற்கு முன்னதாக ஆசியாவில் தன்னை மிகப்பலமான நாடாக உலகிற்கு வெளிப்படுத்த விளைகின்றது. 

அதற்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான், இந்தியாவின் லடாக் எல்லையில் இடம்பெற்ற மோதல்கள், தாய்வான், ஜப்பானுடன் நடைபெறும் முறுகல்கள், தெற்காசிய நாடுகளை நோக்கிய அகலக்கால் பதிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சீனா திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது. 

சீனாவைப் பொறுத்தவரையில் இதுவொரு அரையிறுதி ஆட்டமாகும். இதில் வெற்றிபெற்றால் அடுத்து உலக வல்லரசுடன் மோதும் இறுதி ஆட்டத்திற்கு முழுமையாகத் தன்னை தயார்படுத்திக் கொள்ளும். சீனாவின் இந்த நிகழ்ச்சி நிரலையும், தனது பொருளாதர நெருக்கடி நிலைமையையும் புரிந்து கொண்டுள்ள அமெரிக்கா, ஆசியாவிற்குள்ளேயே சீனாவை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. அதற்காகவே, இந்தியாவை முன்னிலைப்படுத்தி காய்களை நகர்த்துகின்றது. 

இந்த காய்நகர்த்தலுக்காக ‘குவாட்டை’ அமெரிக்க பயன்படுத்த முனைகின்றது. பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் 2013ஆம் ஆண்டு ‘குவாட்’ ஆரம்பிக்கப்பட்ட போதும் அது முறையாக செயற்பட்டிருக்கவில்லை. தற்போது அதற்கு மீண்டும் செயல்வடிவம் அளிக்கப்படுகின்றது. அந்தவகையில் இலங்கையையும் குவாட்டிற்குள் உள்ளீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது. 

அதன் முதலங்கமாகவே சீனாவை விட்டு விலகும்படியும் நிதி உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகவும்  பொம்பியோ கூறியபோதும் ராஜபக்ஷவினர் அதனை நிராகரித்துவிட்டார்கள். 

ஏனென்றால் இலங்கை குவாட்டினுள் இணைந்து கொண்டால் அது முழுமையாக சீனாவை பகைக்க வேண்டியதொரு நிலைமை ஏற்படும். அதற்கு இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. எனினும் குவாட்டினுள் இலங்கையை உள்ளீர்க்கும் செயற்பாட்டில் அமெரிக்க தொடர்ந்தும் ஈடுபடும். 

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதற்காக வெளிவிவகாரக் கொள்கை மாறப்போவதில்லை. அணுகுமுறை ரீதியிலான மாற்றம் மட்டுமே இருக்கும். ஆகவே குவாட்டினுள் இலங்கை, மாலைதீவு உள்ளிட்ட ஏனைய நாடுகளையும் உள்ளீர்க்கும் முனைப்புக்கள் தொடர்ந்தும் நீடிக்கும்.

கேள்வி:- இந்திய, இலங்கை, மாலைதீவு பாதுகாப்பு ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு பின்னர் தூசுதட்டப்பட்டுள்ளமையும் அந்தப்பின்னணியில் இந்தியப் பாதுகாப்பு செயலர் அஜித் டோவல் இலங்கைக்கு வந்து உயர்மட்டச்சந்திப்புக்களில் ஈடுபட்டமையையும் எவ்வாறு நோக்கலாம்? 

பதில்:- இலங்கைக்குள் சீனாவின் அபரிமிதமான பிரவேசம் இந்தியாவுக்கு தேசியப் பாதுகாப்புச் சார்ந்தது. ஆகவே அந்த விடயங்களை கையாள்வதற்கு பொருத்தமான நபராக இருப்பவர் பாதுகாப்புச் செயலர் அஜித் டோவல் தான். 

கடல் ரீதியான தொடர்பினைக் கொண்ட இலங்கை, மாலைதீவு ஆகிய இரு நாடுகளுடன் அவர் நிச்சயமாக பாதுகாப்புச் சார்ந்த விடயங்களை பேசியிருப்பார். இலங்கை மற்றும் மாலைதீவு எந்த எல்லைவரையில் சீனாவுடன் பயணிக்க முடியும், எந்தெந்த நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு கரிசனைகள் உள்ளன. அதற்கான மாற்றுவழிகள் என்ன என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களையும் அவர் வெளிப்படுத்த தவறியிருக்க மாட்டார். 

கூடவே இலங்கைக்கு காணப்படும் கடன்சுமை உள்ளிட்ட பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டிருப்பார். அதன் காரணமாகவே 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அவருடைய பயண காலத்திலேயே அறிவிக்கப்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை ஒரு சிறு தீவாக இருந்தாலும் ஆசியப்பிராந்தியத்தில் குறிப்பாக இந்திய, சீனா இடையே போரொன்று மூண்டால் இலங்கையின் நிலப்பரப்பு இரு நாடுகளுக்குமே மிகவும் பெறுமதி மிக்கதாக இருக்கும். சீனாவைப் பொறுத்தவரையில், தென்சீனக் கடலில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து செயற்கை தீவை அமைத்து வருகின்றது. செயற்கை தீவுக்காக அத்தனை கோடிகளை சீனா வாரி இறைக்கின்றது என்றால் அதன் பிரதிபலன் மிகப்பெரியதாகவே இருக்கும். 

அவ்வாறிருக்க, இயற்கையாகவே தரைத்தோற்ற வளங்களைக் கொண்டிருக்கும் இலங்கையையும் தனக்குச் சார்பாக பயன்படுத்தவே சீனா திட்டமிடும். செயற்கைத் தீவுக்கு செலவு செய்யும் நிதியை விடவும் அரைப்பங்கு நிதியைப் பயன்படுத்தி இலங்கையைத் தன் வசப்படுத்தினாலே அது இலாபம் தான் என்றும் சீனா கருதும்.

இதனைவிடவும், சீனா, இந்தியாவின் தெற்குப் பகுதி ஊடாக போர் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக இருந்தால் அந்நாட்டுக்கு ஆகக்குறைந்தது இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் அவசியமாகின்றன. 

சீனாவிடத்தில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களே கைவசம் உள்ளன. அவை இரண்டும் தென்சீனக் கடலில் பயன்பாட்டில் உள்ளன. அந்நாட்டிற்கு புதிய கப்பல்களை வழங்குவதற்கு வெளிநாடுகள் தயாராக இல்லை. எனவே சீனாவே புதிய கப்பலை நிர்மானிக்க வேண்டும். அதற்குப் பல வருடங்கள் தேவை. 

எனவே தான், கப்பல்போக்குவரத்து, விமானப்போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கையை தனது ‘பிடிக்குள்’ வைதிருக்கவே சீனா பெரிதும் விளைகின்றது. 

மேலும் இந்தியாவிடத்தில் விமானம் தாங்கி கப்பலொன்றே தற்போதுள்ளது. மற்றையது இறுதிக்கட்ட தயார்படுத்தலில் உள்ளது. அரேபியக் கடலில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒரு பொருட்டே கிடையாது. ஆகவே இந்தியாவுக்கு சீனாவையே கையாள வேண்டியுள்ளது. 

இந்தியாவுக்கு சீனாவுடன் முரண்பாடுகள் ஏற்பட்டால் இந்த இரண்டு விமானம் தாங்கி கப்பல்களையும் இலட்ச தீவுகளிலிருந்து கொக்கோ தீவுகள் வரையிலும், மாலைதீவு பிராந்தியத்திலும்  எங்குவேண்டுமானாலும் நிறுத்தி வைக்க முடியும். அவ்வாறு நிறுத்துவதால் ஐரோப்பியாவுடனான சீனாவின் கடற்போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படும். அச்சமயத்திலும் இலங்கையை பயன்படுத்தவே சீனா முனையும். ஆகவே இந்தியா முன்னெச்சரிக்கையுடன் இந்த விடயத்தினை கையாள வேண்டியுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவுக்கு தெற்கிலும், வடக்கிலும் ஏக நேரத்தில் சீனா பதற்றத்தினை உருவாக்கும் போது மிகுந்த நெருக்கடிகள் ஏற்படும். 

அச்சமயத்தில் இலங்கையின் கடல்,விமான, நிலப்பரப்பு ஸ்தானங்களை சீனா பயன்படுத்த ஆரம்பித்தால் நிலைமைகள் வெகுவாக மோசமடையும். ஆகவே சீனா அவ்விதமாக இலங்கையை பயன்படுத்த முனைவதற்கு முன்னதாகவே அதனை தடுத்து நிறுத்தவேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது. 

அதனை அடியொற்றிய பல்வேறு பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலர் டோவல் தனது இலங்கைப் பயணத்தின் போது ஆழமாக கவனம் செலுத்தியிருக்கலாம்.