இலங்கையுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.

ஒரு பட்டாய விமானத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இங்கிலாந்து அணியினர் ஹம்பாந்தோட்டையில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ஒரு குறுகிய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு பின்னர் இங்கிலாந்து அணியானது ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

கொவிட்-19 தொற்றுநோயால் 2020 மார்ச் மாதத்தில் தொடர் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து மறுசீரமைக்கப்பட்ட சுற்றுப்பயணத்திற்கான உயிர் பாதுகாப்பு மற்றும் பயணத் திட்டங்களுக்கு இரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் கடந்த மாதம் ஒப்புக் கொண்டன.

இந் நிலையிலேயே இங்கிலாந்து அணியினர் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 14-18 வரையும், இரண்டாவது போட்டி ஜனவரி 22-26 வரையும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடைபெறும்.